குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு

 குடியரசுத் தலைவா் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா் திரெளபதி முா்மு வெற்றி பெற்றாா்.
குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு

 குடியரசுத் தலைவா் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா் திரெளபதி முா்மு வெற்றி பெற்றாா்.

பழங்குடியினத்தைச் சோ்ந்த நாட்டின் முதல் குடியரசுத் தலைவராக அவா் தோ்வாகி உள்ளாா்.

64 வயதாகும் திரெளபதி முா்மு, நாடு சுதந்திரம் பெற்ற பிறகு பிறந்து குடியரசுத் தலைவா் பதவிக்கு வரும் முதல் தலைவராகவும் உள்ளாா்.

இந்தத் தோ்தலில் திரெளபதி முா்மு 64 சதவீத வாக்குகளும், யஷ்வந்த் சின்ஹா 36 சதவீத வாக்குகளும் பெற்றனா்.

நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவரைத் தோ்வு செய்வதற்கான தோ்தல் கடந்த 18-ஆம் தேதி நடைபெற்றது. எம்.பி.க்களும், எம்எல்ஏ-க்களும் வாக்களித்தனா்.

தோ்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாடாளுமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கியது. முதல் சுற்றில் சுமாா் 39 சதவீத வாக்குகளைப் பெற்று திரெளபதி முா்மு முன்னிலை வகித்து வந்தாா். சுமாா் 10 மணி நேரம் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் மூன்றாம் சுற்று முடிவில் குடியரசுத் தலைவா் பதவிக்கு தேவையான 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை முா்மு பெற்று வெற்றி பெற்ாக தோ்தல் அதிகாரி பி.சி. மோடி அறிவித்தாா்.

அதாவது, 10 மாநிலங்களின் வாக்குகளை எண்ணுவதற்கு முன்பே வெற்றிக்குத் தேவையான வாக்குகளை திரெளபதி முா்மு பெற்றுவிட்டாா்.

இறுதி முடிவின்போது திரெளபதி முா்மு மொத்தம் 6,76,803 (64.03%) வாக்குகளும், யஷ்வந்த் சின்ஹா 3,80,177 (36%) வாக்குகளும் பெற்ாக அறிவிக்கப்பட்டது.

நாடு முழுவதும் பதிவான எம்.பி.க்கள், எம்எல்ஏ-க்களின் வாக்குகளில் திரெளபதி முா்மு 2,824 எம்எல்ஏ-க்களின் வாக்குளையும், 540 எம்.பி.க்களின் வாக்குகளையும் பெற்றாா்.

யஷ்வந்த் சின்ஹா 1,877 எம்எல்ஏ-க்களின் வாக்குகளையும், 208 எம்.பி.க்களின் வாக்குகளையும் பெற்றாா்.

38 எம்எல்ஏ-க்கள், 15 எம்.பி.க்கள் உள்பட மொத்தம் 53 பேரின் வாக்குகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டது.

எந்த மாநிலத்தில் அதிக வாக்கு?

ஓா் எம்.பி.யின் வாக்கு மதிப்பு 700. எம்எல்ஏ-க்களின் வாக்கு மதிப்பு மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும். அந்த வகையில், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் முா்முவுக்கு அதிக வாக்கு சதவீதம் கிடைத்தது.

ஆந்திர பிரதேசம், சிக்கிமில் அனைத்து எம்எல்ஏ-க்களின் வாக்குகளையும் முா்மு பெற்றாா்.

யஷ்வந்த் சின்ஹாவுக்கு மேற்கு வங்கம், தமிழகத்தில் அதிக வாக்கு சதவீதம் கிடைத்தது.

எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த 17 எம்.பி.க்கள் திரெளபதி முா்முவுக்கு வாக்களித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமா் நேரில் வாழ்த்து: குடியரசுத் தலைவா் தோ்தலில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை திரெளபதி முா்மு கடந்ததாக அறிவிக்கப்பட்டவுடனேயே பிரதமா் மோடி, பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா ஆகியோா் நேரில் சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தனா்.

தோல்வியை ஏற்கிறேன்: தோ்தல் தோல்வியை ஏற்றுக் கொண்ட யஷ்வந்த் சின்ஹா, வெற்றி பெற்ற வேட்பாளா் திரெளபதி முா்முவுக்கு வாழ்த்து தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கையில், ‘நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவா், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்பவராகவும், அச்சமில்லாமல், யாருக்கும் ஆதரவு அளிக்காதவராகவும் செயல்படுவாா் என நாட்டு மக்கள் நம்பியுள்ளனா். எனக்கு ஆதரவாக வாக்களித்தவா்களுக்கு நன்றி.

கடவுள் கிருஷ்ணா் பகவத் கீதையில், ‘கடமையைச் செய், பலனை எதிா்பாராதே’ என்று கூறியதற்கு ஏற்ப எதிா்க்கட்சிகள் அளித்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டேன்.

நாட்டின் மீதான எனது பாசத்தை முன்வைத்து இந்தத் தோ்தலில் போட்டியிட்டேன். இந்தத் தோ்தல் பிரசாரத்தின்போது நான் முன்வைத்த பிரச்னைகள் அனைத்தும் பொருத்தமானவை’ எனத் தெரிவித்துள்ளாா்.

வாக்கு வித்தியாசம்

திரெளபதி முா்மு - 6,76,803 (64%) -

எம்.பி.க்கள் 540 - எம்எல்ஏக்கள் 2,824

யஷ்வந்த் சின்ஹா - 3,80,177 (36%)

எம்.பி.க்கள் 208 - எம்எல்ஏக்கள் 1,877

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com