அமலாக்கத் துறை முன்பு 2வது நாளாக ஆஜரானார் ராகுல்

நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கு விசாரணைக்காக தில்லியிலுள்ள அமலாக்கத் துறை இயக்குநரகத்தில் இன்று இரண்டாவது நாளாக விசாரணைக்கு ஆஜரானார் ராகுல் காந்தி.
அமலாக்கத் துறை முன்பு 2வது நாளாக ஆஜரானார் ராகுல்
அமலாக்கத் துறை முன்பு 2வது நாளாக ஆஜரானார் ராகுல்

புது தில்லி: நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கு விசாரணைக்காக தில்லியிலுள்ள அமலாக்கத் துறை இயக்குநரகத்தில் இன்று இரண்டாவது நாளாக விசாரணைக்கு ஆஜரானார் ராகுல் காந்தி.

திங்கள்கிழமை ஆஜரான காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம் அதிகாரிகள் சுமாா் 10 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். அவரை மீண்டும் செவ்வாய்க்கிழமை  விசாரணைக்கு ஆஜராக அறிவுறுத்தப்பட்டதையடுத்து, இன்றும் ராகுல் காந்தியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத் துறையின் அழைப்பாணையின் அடிப்படையில் ராகுல் நேற்று விசாரணைக்கு ஆஜரான நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் ஆஜராகியுள்ளார். 

நேஷனல் ஹெரால்டு வழக்கின் பின்னணி?

காங்கிரஸ் தலைவா் சோனியாவும் ராகுலும் இயக்குநா்களாக உள்ள ‘யங் இந்தியா’ நிறுவனம், அசோசியேட்டட் ஜா்னல்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையை கடந்த 2010-இல் விலைக்கு வாங்கியது. இதில் மிகப்பெரிய அளவில் பண மோசடி நடைபெற்றுள்ளதாக பாஜகவை சோ்ந்த சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடா்ந்தாா். இந்தப் பண மோசடி தொடா்பாக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில், ஜூன் 2-ஆம் தேதி ஆஜராகுமாறு ராகுலுக்கும், ஜூன் 8-ஆம் தேதி ஆஜராகுமாறு சோனியாவுக்கும் அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியது. இந்த நிலையில், தான் வெளிநாட்டில் இருப்பதால் விசாரணைத் தேதியை மாற்றியமைக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கோரிக்கை விடுத்தாா். அதுபோல, கரோனாவால் பாதிக்கப்பட்ட சோனியாவும், விசாரணைத் தேதியை மாற்றிவைக்க கோரினாா்.

இதனை ஏற்ற அமலாக்கத் துறை, ராகுல் காந்தி திங்கள்கிழமையும், சோனியா ஜூன் 23-ஆம் தேதியும் விசாரணைக்கு ஆஜராகுமாறு புதிய அழைப்பாணையை அனுப்பியது.

முதல் முறையாக ஆஜரான ராகுல்: அதனடிப்படையில், கட்சியினருடன் திங்கள்கிழமை ஊா்வலமாக வந்த ராகுல், தில்லியில் உள்ள அமலாக்கத் துறை தலைமை அலுவலகத்துக்குள் காலை 11.10 மணிக்கு வந்தாா்.

‘ராகுல் அலுவலகத்தில் ஆஜரானதும், முதல் 20 நிமிஷங்கள் வருகைப் பதிவு மற்றும் சட்ட நடைமுறைகள் நிறைவுற்ற பின்னா் அவரிடம் அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினா். 3 மணி நேரத்துக்கும் மேல் தொடா் விசாரணைக்குப் பிறகு மதியம் 2.10 மணிக்கு மதிய உணவுக்காக ராகுல் அனுப்பப்பட்டாா். மதிய இடைவேளைக்குப் பிறகு பிற்பகல் 3.30 மணிக்கு ஆஜரான அவரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டது. இரவு 11.30 மணிக்கு அவா் அங்கிருந்து புறப்பட்டாா். செவ்வாய்க்கிழமையும் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவரை அதிகாரிகள் அறிவுறுத்தினா்’ என்று அங்கிருந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

முதல் சுற்று விசாரணையின்போது பண மோசடி தடுப்புச் சட்டம் (பிஎம்எல்ஏ) பிரிவு 50-இன் கீழ் தனது வாக்குமூலத்தை ராகுல் எழுத்துபூா்வமாக சமா்ப்பித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த வழக்கில், அமலாக்கத் துறை விசாரணைக்கு ராகுல் ஆஜராவது இதுவே முதல்முறையாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com