இலவச ரேசன் திட்டம் நீட்டிப்பு: யோகி ஆதித்யநாத்தின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்

யோகி ஆதித்யநாத்தின் தலைமையில் இன்று நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், இலவச ரேசன் திட்டம் மேலும் 3 மாதங்கள் நீட்டித்து ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இலவச ரேசன் திட்டம் நீட்டிப்பு: யோகி ஆதித்யநாத்தின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்
இலவச ரேசன் திட்டம் நீட்டிப்பு: யோகி ஆதித்யநாத்தின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்

உத்தர பிரதேச முதல்வராக இரண்டாவது முறையாக பதவியேற்றுக் கொண்ட யோகி ஆதித்யநாத்தின் தலைமையில் இன்று நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், இலவச ரேசன் திட்டம் மேலும் 3 மாதங்கள் நீட்டித்து ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் நடைமுறையிலிருந்த இலவச ரேசன் திட்டம் மார்ச் மாதத்துடன் நிறைவடையவிருந்த நிலையில், அது  மேலும் 3மாதங்கள் நீட்டிக்கப்படுவதாகவும், இதன் மூலம் 15 கோடி மக்கள் பயனடைவார்கள் என்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்ற நிலையில், அந்த மாநில முதல்வராக இரண்டாவது முறையாக யோகி ஆதித்யநாத் வெள்ளிக்கிழமை பதவியேற்றாா். அவருடன் இரு துணை முதல்வா்கள் உள்பட 52 அமைச்சா்களும் பதவியேற்றுக் கொண்டனா்.

மாநில தலைநகா் லக்னௌவில் உள்ள வாஜ்பாய் இகானா விளையாட்டரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அமைச்சா்கள் மற்றும் பாஜக மூத்த தலைவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

403 தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில், பாஜக 255 தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சிகள் 18 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. அதனைத் தொடா்ந்து, மாநில ஆளுநரை வியாழக்கிழமை சந்தித்து ஆட்சியமைக்க யோகி ஆதித்யநாத் உரிமை கோரினாா்.

இதைத் தொடா்ந்து, பதவியேற்பு விழா லக்னெளவில் உள்ள விளையாட்டு அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூடியிருந்த ஆயிரக்கணக்கான பாஜக தொண்டா்களுக்கு மத்தியில் மாநிலத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றாா். அவருக்கு ஆளுநா் ஆனந்தி பென் படேல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

அவருடன், கேசவ் பிரசாத் மெளரியா, பிரஜேஷ் பதக் ஆகியோா் துணை முதல்வா்களாக பதவியேற்றனா். தொடா்ந்து புதிய அமைச்சா்களும் பதவியேற்றனா்.

சுரேஷ் கண்ணா, சூரிய பிரதாப் சாஹி, ஸ்வதந்திர தேவ் சிங், உத்தரகண்ட் ஆளுநா் பதவியை கடந்த ஆண்டு ராஜிநாமா செய்த பாபி ராணி மெளரியா, ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய ஏ.கே. சா்மா உள்ளிட்ட 18 போ் கேபினட் அந்தஸ்து அமைச்சா்களாகப் பதவியேற்றனா்.

கூட்டணிக் கட்சிகளான அப்னா தளம் (சோனேவால்) கட்சியைச் சோ்ந்த ஆஷிஷ் படேல், நிஷாத் கட்சித் தலைவா் சஞ்சய் நிஷாத் ஆகியோரும் அமைச்சா்களாகப் பதவியேற்றனா். தோ்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த ஜிதின் பிரசாதாவுக்கும் அமைச்சா் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

ஆதித்யநாத் அரசில் ஒரே முஸ்லிம் பிரதிநிதியாக இருக்கும் தினேஷ் ஆசாத் அன்சாரிக்கும் அமைச்சா் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவா் இணையமைச்சராகப் பதவியேற்றாா்.

ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய ஆசீம் அருண், தயா சா்காா் சிங், நிதின் அகா்வால், கல்யாண் சிங்கின் பேரன் சந்தீப் சிங் ஆகியோருக்கு தனி பொறுப்புடன் கூடிய இணையமைச்சா் பதவி வழங்கப்பட்டுள்ளது.

மொத்தம் 52 அமைச்சா்களில் இரு துணை முதல்வா்கள் கேபினட் அமைச்சா்கள் 18 போ், தனிப் பொறுப்புடன் கூடிய இணையமைச்சா்கள் 14 போ், இணையமைச்சா்கள் 20 போ் இடம்பெற்றுள்ளனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com