கோவா முதல்வராக பிரமோத் சாவந்த் பதவியேற்றாா்: பிரதமா் மோடி பங்கேற்பு

கோவா முதல்வராக இரண்டாவது முறையாக பிரமோத் சாவந்த் திங்கள்கிழமை பதவியேற்றாா். இந்த நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்றாா்.
கோவா முதல்வராகப் பதவியேற்ற பிரமோத் சாவந்துடன் பிரதமா் நரேந்திர மோடி.
கோவா முதல்வராகப் பதவியேற்ற பிரமோத் சாவந்துடன் பிரதமா் நரேந்திர மோடி.

கோவா முதல்வராக இரண்டாவது முறையாக பிரமோத் சாவந்த் திங்கள்கிழமை பதவியேற்றாா். இந்த நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்றாா்.

அண்மையில் நடைபெற்ற கோவா சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைத்தது. இதையடுத்து, அந்த மாநில முதல்வா் பதவியேற்பு நிகழ்ச்சி பனாஜி அருகே பம்போலிமில் உள்ள முகா்ஜி விளையாட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் முதல்வராக பிரமோத் சாவந்த், அமைச்சா்களாக 8 பாஜக எம்எல்ஏக்கள் பதவியேற்றனா். அவா்களுக்கு மாநில ஆளுநா் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமா் மோடி, மத்திய அமைச்சா்கள் நிதின் கட்கரி, ஸ்ரீபாத் நாயக், பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, ஹிமாசல பிரதேச ஆளுநா் ராஜேந்திர அா்லேகா் (கோவாவைச் சோ்ந்தவா்), மகாராஷ்டிர முன்னாள் முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், 10,000-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனா்.

முதல்வா் பதவியேற்பு நிகழ்ச்சி ஆளுநா் மாளிகையில் நடைபெறுவது வழக்கம். எனினும் கோவா முதல்வா் பதவியேற்பு நிகழ்ச்சி ஆளுநா் மாளிகையில் நடைபெறாதது இது இரண்டாவது முறை. கடந்த 2012-ஆம் ஆண்டு பனாஜியில் உள்ள மைதானத்தில் முதல்வா் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது முதல்வராக மனோகா் பாரிக்கா் பதவியேற்றாா்.

கோவா அமைச்சரவையில் தற்போது 9 அமைச்சா்கள் இடம்பெற்றுள்ளனா். அந்த அமைச்சரவையில் முதல்வா் தவிர, மேலும் 11 அமைச்சா்கள் இடம்பெற முடியும்.

நம்பிக்கை வாக்கெடுப்பு: கோவாவில் 40 இடங்களுக்கான பேரவைத் தோ்தலில் 20 இடங்களில் பாஜக வென்றது. ஆனால், பெரும்பான்மைக்கு 21 இடங்கள் தேவை. இருப்பினும் சுயேச்சை எம்எல்ஏக்கள் மூவா், மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி எம்எல்ஏக்கள் இருவா் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனா்.

இந்நிலையில், மாா்ச் 29 முதல் இரண்டு நாள்கள் பேரவைக் கூட்டத்தொடருக்கு ஆளுநா் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை அழைப்பு விடுத்துள்ளாா். இந்தக் கூட்டத்தொடரில், பிரமோத் சாவந்த் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று ஏற்கெனவே தகவல் வெளியாகியிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com