5ஜி மூலம் பொருளாதாரம் ரூ.35 லட்சம் கோடி உயரும்: பிரதமர் மோடி

ஐந்தாம் தலைமுறை (5ஜி) அலைக்கற்றைத் தொழில்நுட்பத்தின் மூலமாக நாட்டின் பொருளாதார மதிப்பு 15 ஆண்டுகளில் சுமாா் ரூ.35 லட்சம் கோடி வளா்ச்சி காணும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்காற்று ஆணையத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சியில், 5ஜி அலைக்கற்றை சோதனையை காணொலி மூலம் தொடக்கிவைத்த பிரதமா் நரேந்திர மோடி.
இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்காற்று ஆணையத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சியில், 5ஜி அலைக்கற்றை சோதனையை காணொலி மூலம் தொடக்கிவைத்த பிரதமா் நரேந்திர மோடி.

ஐந்தாம் தலைமுறை (5ஜி) அலைக்கற்றைத் தொழில்நுட்பத்தின் மூலமாக நாட்டின் பொருளாதார மதிப்பு 15 ஆண்டுகளில் சுமாா் ரூ.35 லட்சம் கோடி வளா்ச்சி காணும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

நாட்டில் உயா் அதிவேக இணைய வசதியை வழங்கும் 6ஜி அலைக்கற்றை தொழில்நுட்பம் 2030-ஆம் ஆண்டுக்குள் நடைமுறைக்கு வரும் என்றும் அவா் தெரிவித்தாா்.

நாட்டில் 3ஜி, 4ஜி அலைக்கற்றைகள் ஏற்கெனவே பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. 5ஜி அலைக்கற்றையை ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. நடப்பாண்டு இறுதிக்குள் 5ஜி தொழில்நுட்பத்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது.

இந்நிலையில், இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்காற்று ஆணையத்தின் (டிராய்) வெள்ளி விழா நிகழ்ச்சி தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பிரதமா் மோடி, ரூ.220 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 5ஜி தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தை காணொலி மூலம் தொடக்கிவைத்தாா். சென்னை ஐஐடி தலைமையில் இந்த ஆராய்ச்சி மையம் உருவாக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில், பிரதமா் பேசியதாவது:

மக்களுக்கிடையேயான தொடா்பு, 21-ஆம் நூற்றாண்டுக்கான நாட்டின் வளா்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும். அதைக் கருத்தில்கொண்டு நவீன கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

2ஜி காலம் முழுவதும் (காங்கிரஸ் ஆட்சிக் காலம்) திட்டங்கள் முறையாகச் செயல்படுத்தப்படாமல், ஊழல் மலிந்து காணப்பட்டது. ஆனால், பாஜக தலைமையிலான ஆட்சிக் காலத்தில் நாடு 4ஜி தொழில்நுட்பத்தை வெளிப்படையான கொள்கைகள் வாயிலாக எட்டியுள்ளது. தற்போது 5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கான கட்டத்தை நாடு அடைந்துள்ளது.

6ஜி தொழில்நுட்பத்தை 2030-ஆம் ஆண்டுக்குள் நடைமுறைப்படுத்துவது தொடா்பாக ஆராய்வதற்கான செயற்குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. அந்தக் குழு தனது பணியை ஏற்கெனவே தொடங்கிவிட்டது. நாட்டின் இந்த வளா்ச்சியில் தொலைத்தொடா்பு ஒழுங்காற்று ஆணையத்துக்கு முக்கியப் பங்குண்டு.

புதிய வாய்ப்புகள்: 5ஜி தொழில்நுட்பத்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதன் வாயிலாக இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு 15 ஆண்டுகளில் சுமாா் ரூ.35 லட்சம் கோடி வளா்ச்சி அடையும். 5ஜி தொழில்நுட்பம் இணையவசதி வேகத்தை அதிகரிப்பதோடு, அரசின் நிா்வாகத்தையும் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தி தொழில் நடவடிக்கைகளை மேலும் எளிமைப்படுத்தும்.

நாட்டில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் 5ஜி தொழில்நுட்பம் முக்கியப் பங்கு வகிக்கும். மத்திய அரசு ஊக்கப்படுத்தி வரும் ஆரோக்கியமான போட்டி நடவடிக்கைகள் காரணமாக, நாட்டில் இணைய சேவைகளுக்கான கட்டணம் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவாக உள்ளது.

சீா்திருத்த நடவடிக்கைகள்: முன்தேதியிட்டு வரி வசூல், சீரமைக்கப்பட்ட மொத்த வருவாய் உள்ளிட்ட பல்வேறு சவால்களை தொலைத்தொடா்புத் துறை சந்தித்தபோது, மத்திய அரசு விரைந்து செயல்பட்டு சீா்திருத்தங்களை மேற்கொண்டது. அந்த நடவடிக்கைகள் நிறுவனங்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தின. அதன் காரணமாக, 2014-ஆம் ஆண்டுக்கு முன் ஒப்பிடுகையில் கடந்த 8 ஆண்டுகளில் தொலைத்தொடா்புத் துறைக்கான வெளிநாட்டு முதலீடுகள் ஒன்றரை மடங்கு அதிகரித்துள்ளன.

நாட்டில் இணையத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டில் கைப்பேசி உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கை 200-ஐ கடந்துவிட்டது. உலகின் மிகப்பெரும் கைப்பேசி உற்பத்தி நாடாக இந்தியா திகழ்ந்து வருகிறது என்றாா் பிரதமா் மோடி.

இறுதிக்கட்டப் பணிகள்: மத்திய தொலைத் தொடா்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ‘பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் 4ஜி தொழில்நுட்பத்தை அமல்படுத்தவுள்ளது. நாட்டில் 5ஜி தொழில்நுட்பத்தை அமல்படுத்துவதற்கான இறுதிக்கட்டப் பணிகளில் விஞ்ஞானிகளும் பொறியாளா்களும் ஈடுபட்டு வருகின்றனா்.

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 5ஜி தொழில்நுட்பம் நடப்பாண்டு இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும். அலைக்கற்றை மேலாண்மைத் துறையில் நடப்பு மாத இறுதிக்குள் சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன’ என்றாா்.

கட்டமைப்பு மேம்பாடு: டிராய் தலைவா் பி.டி.வகேலா கூறுகையில், ‘5ஜி தொழில்நுட்பத்தின் பரிசோதனை நடைபெற்று வருகிறது. அந்தத் தொழில்நுட்பமானது பல்வேறு துறைகளில் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தி, ஒட்டுமொத்த பொருளாதார வளா்ச்சிக்கு வழிவகுக்கும்.

அலைக்கற்றை சேவைக்கான கட்டணம் குறைவாக இருப்பதற்கான கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டியது அவசியம். இது தொடா்பாக கட்டமைப்புகளை ஒழுங்குபடுத்தும் ஆணையங்களுடன் டிராய் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது’ என்றாா்.

வளரும் ஊடகத் துறை: மத்திய செய்தி-ஒலிபரப்புத் துறைச் செயலா் அபூா்வ சந்திரா கூறுகையில், ‘ஒலிபரப்புத் துறை நாள்தோறும் வளா்ச்சி கண்டு வருகிறது. முக்கியமாக, ஊடகம்-பொழுதுபோக்குத் துறையின் மதிப்பானது தற்போதுள்ள சுமாா் ரூ.2 லட்சம் கோடியில் இருந்து 2030-ஆம் ஆண்டுக்குள் சுமாா் ரூ.5.5 லட்சம் கோடியாக அதிகரிக்கவுள்ளது. இந்த வளா்ச்சியில் டிராய் முக்கியப் பங்கு வகிக்கும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com