பேரறிவாளன் விடுதலை: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ஏ.ஜி.பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்
Published on
Updated on
2 min read

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ஏ.ஜி.பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
 அரசமைப்புச் சட்டத்தின் 142-ஆவது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, அவரது மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
 முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
 இந்த நிலையில், 31 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்துவரும் பேரறிவாளன், தன்னை விடுதலை செய்ய உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
 இந்த மனு, கடந்த மே 4-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, தகுதி அடிப்படையில் வாதிட மத்திய அரசு தயாராக இல்லாததால், நீதிமன்றம் அவரை விடுவிக்கும் உத்தரவைப் பிறப்பிப்பது குறித்து பரிசீலிக்க நேரிடும் என்று மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.
 மேலும், இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் முடிவு செய்யும் வரை காத்திருக்க வேண்டும் என்ற மத்திய அரசின் யோசனையை ஏற்கவும் நீதிமன்றம் மறுத்து விசாரணையைத் தள்ளிவைத்திருந்தது.
 இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த மே 11-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றங்களில் மன்னிப்பு அளிப்பது தொடர்பாக குடியரசுத் தலைவர், ஆளுநருக்கு உள்ள அதிகாரங்கள் குறித்து மத்திய, மாநில அரசுகளிடம் பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
 161-ஆவது சட்டப் பிரிவு: இந்நிலையில், இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது. நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் தலைமையில் நீதிபதிகள் பி.ஆர். கவாய், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
 1980-இல் அரசியல் சாசன அமர்வு முன் தொடரப்பட்ட மரு ராம் (எதிர்) மத்திய அரசு வழக்கில் அளித்த தீர்ப்பில், அரசமைப்புச் சட்டப் பிரிவு 161-ஐ பொருத்தவரை தனது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளது.
 அதில், "ஆளுநர் என்பவர் முறைசார் தலைவர், நிறைவேற்றும் அதிகாரத்தின் ஒரே மையமாகவும் உள்ளார். ஆனால், அமைச்சரவையின் ஆலோசனையைத் தவிர்த்து அவர் செயல்பட இயலாது' எனத் தெரிவித்துள்ளது. ஆளுநர் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், பிரிவு 161-இன் கீழ் அவர் அமைச்சரவை ஆலோசனைக்கு கட்டுப்பட்டவராகிறார்.
 சட்டப் பிரிவு 161-இன் கீழ் தண்டனைகளைக் குறைப்பது, மன்னிப்பு வழங்குவது தொடர்புடைய விவகாரங்களில் மாநில அமைச்சரவையின் ஆலோசனை ஆளுநரைக் கட்டுப்படுத்துகிறது. இதனால், இந்த வழக்கில் மாநில அமைச்சரவையின் பரிந்துரையை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியிருக்கக் கூடாது. இந்தச் செயலானது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாகும்.
 ஆளுநரின் தாமதம்: மேலும், பேரறிவாளனை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை (அதிமுக அரசு) மூலம் 9.9.2018-இல் ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டு, அதன் மீது ஆளுநர் கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் முடிவெடுக்காமல் இருந்துள்ளார். இதற்கான காரணம் மற்றும் தாமதம் குறித்து உச்சநீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கிய போதுதான், மனுதாரருக்கு மன்னிப்பு அளிப்பது தொடர்பான தமிழக அரசின் பரிந்துரையை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பிவைத்தார்.
 இந்த விவகாரத்தில் மத்திய அரசின் தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நட்ராஜ் தனது கடுமையான வாதங்களை முன்வைத்தார். அதில், ஸ்ரீஹரன் வழக்கில் இந்த நீதிமன்றம் அளித்த தீர்ப்பைச் சுட்டிக்காட்டி, இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) எத்தகைய ஷரத்தின் கீழ் தண்டனை விதிக்கப்படும்போது, தண்டனையைக் குறைக்கவோ, மன்னிப்பு வழங்கவோ அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே உள்ளது என்றும், ஆளுநருக்கு 161-ஆவது சட்டப் பிரிவின் கீழ் மன்னிப்பு வழங்க அதிகாரம் இல்லை என்றும் வாதிட்டுள்ளார்.
 ஐபிசி பிரிவு 302 பிரிவின் கீழ் தண்டனையைக் குறைக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது என்பது சரியல்ல. ஏனெனில், இந்தச் சட்டப் பிரிவைப் பொருத்தவரை நாடாளுமன்றத்தாலோ அல்லது அரசமைப்புச் சட்டத்தாலோ மத்திய அரசுக்கு நிறைவேற்றும் அதிகாரம் வழங்கப்படவில்லை.
 நடத்தையில் புகார் இல்லை: தற்போதைய விவகாரத்தில் மேல்முறையீட்டு மனுதாரர் 31 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்துள்ளார். சிறையில் இருந்தபோது அவரது நடத்தையில் புகார் ஏதும் இல்லை. அவர் பரோலில் இருந்தபோதும் அவரது நடத்தையில் புகார் இல்லை.
 மேலும், அவர் கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பது மருத்துவ ஆவணங்கள் மூலம் தெரிய வருகிறது. சிறையில் இருந்தபோது முதுகலைப் பட்டம் உள்பட பல படிப்புகளைப் படித்துள்ளார். அவருக்கு மன்னிப்பு அளிக்க கேட்டு அமைச்சரவை பரிந்துரைத்த கோப்பு இரண்டரை ஆண்டுகளாக ஆளுநரிடம் நிலுவையில் இருந்துள்ளது.
 இந்த விஷயங்களை கவனத்தில் கொள்ளும்போது, இந்த விவகாரத்தை ஆளுநரின் பரிசீலனைக்கு விட்டுவிடுவது சரியானதாக இருக்கும் என நாங்கள் பரிசீலிக்கவில்லை. இதனால், அரசமைப்புச்சட்டத்தின் 142-ஆவது பிரிவின் கீழ் எங்களுக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஜாமீனில் உள்ள மேல்முறையீட்டு மனுதாரரை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிடுகிறோம். மனுதாரரின் ஜாமீன் பத்திரங்கள் ரத்து செய்யப்பட்டு, இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com