தில்லியில் நள்ளிரவு பெய்த பலத்த மழை

தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை காலையில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்த நிலையில், நேற்று நள்ளிரவிலும் பலத்த மழை கொட்டியதால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
தில்லியில் நள்ளிரவு பெய்த பலத்த மழை
தில்லியில் நள்ளிரவு பெய்த பலத்த மழை

தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை காலையில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்த நிலையில், நேற்று நள்ளிரவிலும் பலத்த மழை கொட்டியதால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

நேற்று பெய்த பலத்த மழை காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், மேலும் மழை பெய்து சாலைகளில் ஆறுகளைப் போல தண்ணீர் ஓடுவதால், இன்று காலையும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

திங்கள்கிழமை மாலை முதல் தில்லி, பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் சில பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய காலைப் பொழுதைப் போலவே, மழைக்கு நடுவேதான் தில்லிவாசிகள் விழித்தெழுந்தனா். கடுமையான கோடை வெப்பம் தகித்து வந்த நிலையில், நேற்று முதல் தலைநகரில் பெய்து வரும் மழையால், மக்கள் வெப்பத்திலிருந்து தப்பினாலும், போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டனர்.

தில்லியில் கடந்த வாரத் தொடக்கத்திலிருந்து வானம் மேகமூட்டத்துடன் இருந்து வந்தது. அவ்வப்போது சில இடங்களில் தூறல் மழை பெய்தது. ஆனால், வெப்பத்தைத் தணிக்கும் அளவுக்கு பெரிய அளவில் மழை ஏதும் பதிவாகவில்லை. இந்த நிலையில், வானிலை ஆய்வு மையம் கணித்திருந்த படி, திங்கள்கிழமை நகரில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

இதனால், தலைநகரின் சில பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதைத் தொடா்ந்து, இந்த வாரத்தின் முதல் வேலை நாளான திங்கள்கிழமை ஐடிஓ, டிஎன்டி மற்றும் எய்ம்ஸ்க்கு அருகில் உள்ள பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டதாக போக்குவரத்துக் காவல் துறையினா் தெரிவித்தனா்.

இடியுடன் கூடிய இந்த பலத்த மழை இந்தப் பருவத்தில் முதலாவதாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தில்லியை பொருத்தவரையில், மாா்ச் 1 முதல் கோடைக்காலம் தொடங்குவதாகக் கருதப்படுகிறது. பொதுவாக மாா்ச் மற்றும் மே மாதங்களுக்கு இடையில் 12 முதல் 14 நாள்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும். ஆனால், இந்த பருவத்தில் நான்கைந்து நாள்கள் மட்டுமே இடியுடன் கூடிய மழை பெய்தது. 

திங்கள்கிழமை பெய்த இடி,மின்னலுடன் கூடிய மழை மேற்பரப்பு வெப்பநிலையில் கடுமையான வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. காலை 5.40 மணி முதல் 7 மணி வரையில் வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸிலிருந்து 11 புள்ளிகள் குறைந்து 18 டிகிரி செல்சியஸ் வரை வந்தது. காலை 8.30 மணிக்கு குறைந்தபட்ச வெப்பநிலை 17.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. 

இன்றும் மழைக்கு வாய்ப்பு: இந்த நிலையில், தில்லியில் செவ்வாய்க்கிழமையும் (மே 24) அன்று வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையமும் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் கணித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com