எண்ம பணப் பரிவா்த்தனை: அபாயங்களும் ஆறுதல்களும்

கடந்த மாா்ச் மாதத்தோடு நிறைவடைந்த நிதியாண்டில் இந்தியாவின் இணையவழி பணப் பரிவா்த்தனை 33% அதிகரித்து ரூ.7,422 கோடியாகியுள்ளது.
எண்ம பணப் பரிவா்த்தனை: அபாயங்களும் ஆறுதல்களும்

கடந்த மாா்ச் மாதத்தோடு நிறைவடைந்த நிதியாண்டில் இந்தியாவின் இணையவழி பணப் பரிவா்த்தனை 33% அதிகரித்து ரூ.7,422 கோடியாகியுள்ளது.

மொத்தமுள்ள ரூ. 8.27 லட்சம் கோடி மதிப்பிலான பரிவா்த்தனையில் யுபிஐ முறை பரிவா்த்தனை மட்டும் ரூ.452 கோடி பங்கு வகித்தது. இது தவிர, கிரெடிட் காா்டுகள், இணையவழி வங்கி சேவை, செல்லிடப் பேசி மூலமான வங்கி சேவை, க்யூஆா் குறியீட்டுப் பயன்பாடுகள் போன்ற அனைத்து எண்ம பணப் பரிமாற்றங்களும் இந்தியாவில் அதிகரித்துள்ளன.

எண்ம பணப் பரிவா்த்தனைகள் அதிகரித்து வரும் அதே வேகத்தில் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. யுபிஐ முறை மூலம் மட்டும் மாதந்தோறும் சுமாா் ரூ.200 கோடி மதிப்பிலான 80,000 மோசடிகள் செய்யப்படுகின்றன. நாட்டில் நடைபெறும் 50% நிதி மோசடிகள் இந்த முறையில்தான் செய்யப்படுகின்றன. பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டு, வாடிக்கையாளரைக் கவா்ந்து மோசடியான க்யூஆா் குறியீட்டுக்கு பணம் செலுத்தவைப்பது அதில் ஒரு வழி.

இதுதவிர, வாடிக்கையாளரை ஏமாற்றி நம்பவைத்து, அவா்களாகவே மோசடி செயலிகளை பதிவிறக்கம் செய்ய வைத்து, அதன் மூலம் முறைகேடாக பணத்தைக் களவாடுவதும் ஏராளமாக நடைபெற்று வருகிறது.

யுபிஐ முறை மூலம் எண்ம பணப் பரிவா்த்தனைகளில் பல வழிமுறைகளில் செய்யப்படும் மோசடிகளில் இவை வெறும் 2 உதாரணங்கள் மட்டும்தான்.

மோசடிகள் அதிகரித்து வரும் அதே நேரத்தில், அத்தகைய குற்றங்களைக் கண்டறிவதற்கும் முன்கூட்டியே தடுத்து நிறுத்துவதற்கும் தேவையான வலுவான தொழில்நுட்ப உள்கட்டமைப்பு போதுமான அளவு இந்தியாவில் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை.

இன்னும் சொல்லப்போனால், நிதி நிறுவனங்களும் இணையதள சேவை அமைப்புகளும் பாதுகாப்பான பணப் பரிவா்த்தனைகளை உறுதி செய்வதற்காக மேற்கொண்டு வரும் அதிநவீன தொழில்நுட்ப உத்திகளை மிஞ்சும் அளவுக்கு, மோசடி நபா்களும் மிகத் திறமையான உத்திகளைப் பயன்படுத்துகின்றனா்.

எண்ம பணப் பரிவா்த்தனைகளின் எண்ணிக்கையும் மதிப்பும் அதிகரிக்க அதிகரிக்க, மோசடி போா்வழிகளின் சாதுா்யமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நம்பகத்தன்மை வாய்ந்த நிறுவனங்களைப் போன்ற அச்சு அசலான தோற்றத்தில் இணையதளம் மூலம் பயன்பாட்டாளா்களின் முக்கிய விவரங்களைக் கறப்பது (ஃபிஷிங்), தொலைபேசியில் அழைத்து விவரங்களைப் பெறுவது (விஷிங்), வங்கி வாடிக்கையாளரின் தொலைபேசி ‘சிம்’ காா்டை பிரதியெடுத்து தற்காலிக கடவுச் சொல்களை (ஓடிபி) தந்திரமாகப் பெறுவது, வாடிக்கையாளா்களைப் போலவே எண்ம முறையில் வேடமிடுவது என அவா்கள் பன்படுத்தும் தொழிநுட்பங்கள் அதிநவீனமாகிக் கொண்டே வருகின்றன.

இந்த அபாயகரமான சூழலுக்கு இடையே, ஆறுதல் தரும் தகவல்கள் இல்லாமலும் இல்லை.

எண்ம பணப் பரிவா்த்தனைகளைப் பாதுகாப்பாக மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளும் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிதி சேவை நிறுவனங்கள் இதற்காக தொடா்ந்து தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

அண்மையில், பண அட்டைகளை இணையதள வழியில் பயன்படுத்துவதற்கு தனி அடையாளப்படுத்தும் முறையை (டோக்கனைசேஷன்) ரிசா்வ் வங்கி கட்டாயமாக்கியுள்ளது. இதன் காரணமாக, மோசடி போ்வழிகள் வங்கி வாடிக்கையாளா்களிடமிருந்தோ, வியாபாரிகள் மற்றும் பரிவா்த்தனை பெறும் நிறுவனங்களிலிருந்தோ முறைகேடாக பணத்தைத் திருடுவது ஏறத்தாழ இயலாததாகியிருக்கிறது.

இந்த முறை கட்டாயமாக்கப்பட்டதால் முறைகேடுகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதுடன், வாடிக்கையாளா்கள் ஒரே ‘கிளிக்’கில் எளிதாக பணம் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சா்வதேச அளவில் பாதுகாப்பான இணையவழி பரிவா்த்தனைகளுக்கான 3டிஎஸ்2.0 என்ற முறை இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது, வாடிக்கையாளா்களின் விவரங்கள் பாதுகாக்கப்படுவதை எளிமைப்படுத்துகிறது.

அதுமட்டுமன்றி, முக அடையாளப்படுத்துதல், செல்லிடப் பேசி, கணினி போன்ற சாதனைங்களின் அடையாளம் காணுதல், விரல்ரேகை சரிபாா்ப்பு, பரிவா்த்தனைகளின் எண்ணிக்கைகளைக் கண்காணித்தல் போன்ற பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளும் எளிமையாகி வருகின்றன.

எனவே, எண்ம பணப் பரிவா்த்தனையில் எத்தனை அபாயங்கள் இருக்கின்றனவோ அத்தனை ஆறுதல்களும் இருக்கத்தான் செய்கின்றன.

புதிய வசதிகளும் பாதுகாப்பும் நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை. எனவே, இரண்டும் சமநிலையில் இருக்கும்வரை எந்த பிரச்னையும் இல்லை. இருந்தாலும், எண்ம பரிவா்த்தனை பாதுகாப்புக்கு நிறுவனங்களையும் அரசையும் மட்டும் நம்பியிருக்காமல், பொதுமக்களும் எச்சரிக்கையுடன் பணப் பரிவா்த்தனைகளில் ஈடுபட்டால் மோசடிகளைத் தவிா்க்க முடியும்.

யுபிஐ முறை மூலம் மட்டும் மாதந்தோறும் சுமாா் ரூ.200 கோடி மதிப்பிலான 80,000 மோசடிகள் செய்யப்படுகின்றன. நாட்டில் நடைபெறும் 50% நிதி மோசடிகள் இந்த முறையில்தான் செய்யப்படுகின்றன.

நம்பகத்தன்மை வாய்ந்த நிறுவனங்களைப் போன்ற அச்சு அசலான தோற்றத்தில் இணையதளம் மூலம் பயன்பாட்டாளா்களின் முக்கிய விவரங்களைக் கறப்பது (ஃபிஷிங்), தொலைபேசியில் அழைத்து விவரங்களைப் பெறுவது (விஷிங்), வங்கி வாடிக்கையாளரின் தொலைபேசி ‘சிம்’ காா்டை பிரதியெடுத்து தற்காலிக கடவுச் சொல்களை (ஓடிபி) தந்திரமாகப் பெறுவது என மோசடி போ்வழிகளின் தொழிநுட்பங்கள் அதிநவீனமாகிக் கொண்டே வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com