எங்கெங்கு காணினும் வாரிசு அரசியல்!

மக்களாட்சி முறையில் தேர்தலே மாற்றத்துக்கான ஆயுதம். தம்மை ஆள்வோரை மாற்ற மக்களுக்குக் கிடைக்கும் அமைதியான வாய்ப்பு வாக்குச்சீட்டு.
எங்கெங்கு காணினும் வாரிசு அரசியல்!

 மக்களாட்சி முறையில் தேர்தலே மாற்றத்துக்கான ஆயுதம். தம்மை ஆள்வோரை மாற்ற மக்களுக்குக் கிடைக்கும் அமைதியான வாய்ப்பு வாக்குச்சீட்டு. குறிப்பாக, மாநிலங்களில் நடைபெறும் இடைத்தேர்தல்களின் முடிவுகள் தேசிய அளவிலான அரசியலின் திசையை ஓரளவு வெளிப்படுத்துகின்றன.
 அண்மையில் ஆறு மாநிலங்களைச் சேர்ந்த ஏழு சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடந்து முடிந்த இடைத்தேர்தல்கள், சில முக்கியமான உண்மைகளைக் கூறுகின்றன. என்னதான் மக்களாட்சியில் சிறந்து விளங்குவதாக நம்மை நாமே பாராட்டிக் கொண்டாலும் ஏற்கெனவே சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவரின் குடும்பத்தைச் சார்ந்தவரையே பெரும்பாலான அரசியல் கட்சிகள் இடைத்தேர்தலில் களமிறக்கி இருப்பதை என்னவென்று சொல்வது?
 இந்த இடைத்தேர்தலில் ஏழு தொகுதிகளில் 4-இல் வென்றிருக்கிறது பாஜக. ஆர்ஜேடி, டிஆர்எஸ், சிவசேனை (உத்தவ் அணி) ஆகிய மாநிலக் கட்சிகள் தலா ஒரு தொகுதி வீதம் 3 தொகுதிகளில் வென்றுள்ளன. இதில் அதிகபட்ச ஆதாயம் மத்தியில் ஆளும் கட்சியாக இருக்கும் பாஜகவுக்குத்தான்.
 இடைத்தேர்தல் நடைபெற்ற ஏழு தொகுதிகளில் அக்கட்சி 3 தொகுதிகளில் மட்டுமே வென்றிருந்தது. தற்போது அதன் எண்ணிக்கை மட்டும் அதிகரிக்கவில்லை; வாக்கு சதவீதமும் அதிகரித்திருக்கிறது. ஆனால், வாரிசு அரசியலை கடுமையாக விமர்சிக்கும் பாஜக, தானும் அந்த விஷயத்தில் விதிவிலக்கல்ல என்பதைத்தான் இத்தேர்தலில் நிரூபித்திருக்கிறது.
 உ.பி. கோலா கோகரன்நாத் தொகுதியில் பாஜக எம்எல்ஏ அரவிந்த் கிரி மரணமடைந்ததால் நடைபெற்ற இடைத்தேர்தலில் அவரின் மகன் அமன் கிரியையே வேட்பாளராக நிறுத்தியது பாஜக. அவர் பிரதான எதிர்க்கட்சியான சமாஜவாதி கட்சி வேட்பாளரை 34,298 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறார்.
 ஒடிஸாவில் தாம்நகர் தொகுதியில் பாஜக எம்எல்ஏ விஷ்ணு சேதி மரணமடைந்ததால் நடைபெற்ற இடைத்தேர்தலில் அவரின் மகன் சூர்யவன்ஷி சுராஜை வேட்பாளராக நிறுத்தியது பாஜக. அவர், ஆளும் பிஜு ஜனதாதள வேட்பாளரை 9,881 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறார்.
 பிகாரில் கோபால்கஞ்ச் தொகுதியில் பாஜக எம்எல்ஏ சுபாஷ் சிங் மரணத்தால் நடைபெற்ற இடைத்தேர்தலில் அவரது மனைவி குசும் தேவியையே வேட்பாளாராக்கியது பாஜக. அவர் 1,794 வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்ஜேடி வேட்பாளரை வென்றிருக்கிறார்.
 ஹரியாணா மாநிலத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ குல்தீப் பிஷ்ணோய் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்ததால் பதவியை ராஜிநாமா செய்தார். அங்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் அவரது மகன் பவ்ய பிஷ்ணோய் பாஜக வேட்பாளராகக் களம் கண்டு, 15,740 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரை வென்றிருக்கிறார்.
 பாஜக மட்டுமல்ல, சிவசேனையும் ராஷ்ட்ரீய ஜனதா தளமும்கூட வாரிசு அடிப்படையிலேயே செயல்பட்டிருக்கின்றன. பிகாரில் மொகாமா சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த தேர்தலில் வென்ற அக்கட்சி எம்எல்ஏ ஆனந்த சிங், சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்தது தொடர்பான வழக்கால் பதவி இழந்தார். அங்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் அவரின் மனைவி நீலம் தேவியைக் களமிறக்கியது ஆர்ஜேடி கட்சி. அவர் 16,741 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரை வென்றிருக்கிறார்.
 மகாராஷ்டிரத்தில் அந்தேரி கிழக்குத் தொகுதியில் சிவசேனை (உத்தவ் அணி) கட்சி எம்எல்ஏவாக இருந்த ரமேஷ் லட்கே மரணமடைந்ததை அடுத்து அங்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், அவரின் மனைவி ருதுஜா ரமேஷ் லட்கேவை வேட்பாளராக நிறுத்தியது சிவசேனை. தொகுதி உறுப்பினரின் மறைவைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் அத்தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டால், ஏனைய கட்சிகள் அவரை எதிர்த்துக் களமிறங்குவதில்லை என்கிற மரபுப்படி, மாநிலத்தில் ஆளும் கூட்டணியான பாஜக- சிவசேனை (ஷிண்டே அணி) வேட்பாளரை நிறுத்தவில்லை. எனவே, 53,724 வாக்குகள் வித்தியாசத்தில் ருதுஜா வென்றிருக்கிறார்.
 தெலங்கானா மாநிலத்தில் முனுகோடு தொகுதியில் வென்ற காங்கிரஸ் எம்எல்ஏ ராஜ்கோபால் ரெட்டி பாஜகவில் சேர்ந்ததால் தனது பதவியை ராஜிநாமா செய்தார். அதனால் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக சார்பில் அவரே வேட்பாளராகப் போட்டியிட்டார். எனினும் மாநிலத்தை ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதியின் வேட்பாளர் பிரபாகர் ரெட்டி அங்கு 10,309 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறார்.
 இடைத்தேர்தல்களில் புதிய நபர்களுக்கு வாய்ப்பளிக்க எந்தக் கட்சிக்கும் துணிவில்லை. மக்களாட்சி என்பது ஒருசிலரை மட்டுமே சுற்றி ஓடும் விளையாட்டல்ல. ஆனால், வெற்றியே பிரதானமாகிவிட்ட இந்திய தேர்தல் களத்தில் வாரிசு அரசியலைத் தவிர்க்க முடியாது என்பதுதான் இந்த இடைத்தேர்தல் சொல்லும் செய்தி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com