மேகாலயா - அசாம் எல்லையில் மீண்டும் கலவரம்: இணைய சேவைகள் முடக்கம்

மேகாலயாவில் இன்று அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட பகுதி
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட பகுதி

மேகாலயாவில் இன்று அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து அசாம் காவல்துறை தரப்பில் கூறியதாவது:

அசாம் எல்லைப் பகுதியான மேற்கு கர்பி அங்லாங் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மரக்கட்டைகளை ஏற்றிக் கொண்டு மேகாலயா மாநிலத்தின் மேற்கு ஜெயின்டியா மலைப்பகுதி நோக்கி சென்ற லாரியை இன்று அதிகாலை 3 மணியளவில் அசாம் வனத்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

லாரியின் ஓட்டுநர் மற்றும் உதவியாளர்கள் இருவரை வனத்துறையினர் கைது செய்து, அசாம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

அசாம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில், மேகாலயா எல்லையோர கிராமத்திலிருந்து ஆயுதங்களுடன் பொதுமக்கள் சம்பவ இடத்தில் குவிந்தனர்.

கைது செய்தவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரி காவல்துறை மற்றும் வனத்துறையினருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் கலவரமாக மாறியது.

இந்த கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர அசாம் காவல்துறை தரப்பில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில், அசாம் வனத்துறையை சேர்ந்த ஒருவர், மேகாலயாவை சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

ஆனால், இந்த சம்பவத்தில் மொத்தம் 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாக மேகாலயா தரப்பில் தகவல்கள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, இரு மாநில காவல்துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், மேகாலயாவில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை காரணமாக சமூக ஊடகங்களின் சேவையை எல்லையோர 7 மாவட்டங்களில் நாளை மறுநாள் காலை 10.30 மணிவரை முடக்குவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

ஏற்கெனவே கடந்த மார்ச் மாதம் மேகாலயா - அசாம் மாநிலங்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com