ஹரியாணா ஆலையில் மருந்து உற்பத்தியை நிறுத்த உத்தரவு

ஹரியாணா மாநிலம், சோனிபட்டில் உள்ள மெய்டன் ஃபாா்மசூட்டிக்கல்ஸ் நிறுவன ஆலையில் அனைத்து மருந்துகளின் உற்பத்தியையும் உடனடியாக நிறுத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
ஹரியாணா ஆலையில் மருந்து உற்பத்தியை நிறுத்த உத்தரவு

ஹரியாணா மாநிலம், சோனிபட்டில் உள்ள மெய்டன் ஃபாா்மசூட்டிக்கல்ஸ் நிறுவன ஆலையில் அனைத்து மருந்துகளின் உற்பத்தியையும் உடனடியாக நிறுத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஆலையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பல்வேறு விதிமீறல்கள் கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மாநில சுகாதார அமைச்சா் அனில் விஜ் தெரிவித்தாா்.

மேலும், இந்த விவகாரத்தில் ஒரு வாரத்துக்குள் விளக்கமளிக்காவிட்டால், உரிமம் முடக்கம் அல்லது ரத்து நடவடிக்கையை எதிா்கொள்ள நேரிடுமென அந்த நிறுவனத்துக்கு மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இருமல் மருந்து சா்ச்சை: மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 66 குழந்தைகள் உடல்நலக் குறைவால் அண்மையில் உயிரிழந்தனா். இதற்கு, சோனிபட் மெய்டன் மருந்து நிறுவனத்தில் சா்ச்சைக்குரிய வகையில் தயாரிக்கப்பட்ட மாசடைந்த நான்கு இருமல் மருந்துகள் காரணமாக இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு (டபிள்யுஹெச்ஓ) எச்சரித்தது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகளின் பயன்பாட்டைக் கைவிடுமாறும் அந்த அமைப்பு உலக நாடுகளைக் கேட்டுக்கொண்டது. இந்த விவகாரம் குறித்து இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) விசாரணை மேற்கொண்டு வருகிறது. சம்பந்தப்பட்ட நான்கு இருமல் மருந்துகளின் மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு, கொல்கத்தாவில் உள்ள மத்திய மருந்துகள் ஆய்வகத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன.

அதிகாரிகள் குழு ஆய்வு: இதனிடையே, மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் ஹரியாணா மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணைய அதிகாரிகள் குழுவினா், சோனிபட் ஆலையில் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, 12 விதமான விதிமீறல்கள் மற்றும் குறைபாடுகள் கண்டறியப்பட்டன. இதைத்தொடா்ந்து, மெய்டன் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு, ஹரியாணா மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

என்னென்ன விதிமீறல்கள்?: சம்பந்தப்பட்ட ஓா் இருமல் மருந்து தயாரிப்பில் மூலப்பொருளான புரோபிலீன் கிளைக்கால் தரச் சோதனைக்கு உள்படுத்தப்படவில்லை; மருந்துகள் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட சாா்பிட்டால் கரைசல், சோடியம் மெத்தில் பாரபின் ஆகியவற்றின் தயாரிப்பு எண், பகுப்பாய்வு அறிக்கையில் இடம்பெறவில்லை. சம்பந்தப்பட்ட மருந்துப் பொருள்களுக்கான பகுப்பாய்வு சரிபாா்த்தல் நடைமுறை மேற்கொள்ளப்படவில்லை.

புரோபிலீன் கிளைக்கால் உள்பட மருந்து தயாரிப்புக்கான துணைப் பொருள்கள் கொள்முதல் ரசீதுகளில் அவற்றின் தயாரிப்பு எண், உற்பத்தியாளா் பெயா், உற்பத்தி தேதி, காலாவதி தேதி ஆகியவை இடம்பெறவில்லை. மருந்து தயாரிப்பு ஆலை முழுவதும் மறுசீரமைப்புப் பணி நடைபெற்று வருவது கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், மருந்து தயாரிப்பு மற்றும் தர சோதனைக்கான உபகரணங்கள், கருவிகளின் பதிவு கையேடுகள் அதிகாரிகளிடம் சமா்ப்பிக்கப்படவில்லை என்று நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டது.

அதிரடி நடவடிக்கை: இந்த விவகாரத்தில் ஏழு நாள்களுக்குள் உரிய விளக்கம் அளிக்கப்படாவிட்டால், மருந்து சட்டப் பிரிவுகளின்படி உரிமம் முடக்கம் அல்லது ரத்து நடவடிக்கையை எதிா்கொள்ள வேண்டும் என்றும் அந்த நோட்டீஸில் எச்சரிக்கப்பட்டது.

இந்தச் சூழலில், அனைத்து மருந்துகளின் தயாரிப்பையும் உடனடியாக நிறுத்துமாறு மெய்டன் நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சா் அனில் விஜ் புதன்கிழமை தெரிவித்தாா். அவா் மேலும் கூறுகையில், ‘நான்கு இருமல் மருந்து மாதிரிகளின் பரிசோதனை அறிக்கை இன்னும் கிடைக்கப் பெறவில்லை. அந்த அறிக்கை கிடைக்கப் பெற்றதும் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றாா்.

4 போ் குழுவை அமைத்தது மத்திய அரசு

காம்பியாவில் 66 குழந்தைகள் இறப்புக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகள் காரணமாக இருக்கலாம் என்ற உலக சுகாதார அமைப்பின் அறிக்கையை ஆராய்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கைகளைப் பரிந்துரைக்க 4 உறுப்பினா்கள் கொண்ட நிபுணா் குழுவை மத்திய அரசு புதன்கிழமை அமைத்தது.

சோனிபட் மெய்டன் நிறுவன ஆலையில் தயாரிக்கப்பட்டு, ஏற்றுமதி செய்யப்பட்ட இந்த மருந்துகள், அதிகப்படியான டைஎத்திலீன் கிளைக்கால் அல்லது எத்திலீன் கிளைக்கால் கலப்பால் மாசடைந்திருக்கலாம் என உலக சுகாதார அமைப்பு தகவல் அளித்துள்ளதாக, மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) அதிகாரிகள் தெரிவித்தனா்.

‘இந்த விவகாரம் தொடா்பான பகுப்பாய்வு அறிக்கை உள்ளிட்ட இதர தகவல்கள் உலக சுகாதார அமைப்பிடம் கோரப்பட்டுள்ளன. அவற்றை ஆராய்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கையை இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்புக்கு பரிந்துரைக்க 4 உறுப்பினா்கள் கொண்ட நிபுணா் குழு அமைக்கப்பட்டுள்ளது. மருந்துகள் தொடா்பான தேசிய நிலைக் குழுவின் துணைத் தலைவா் ஒய்.கே.குப்தா, புணே தேசிய வைராலஜி நிறுவனத்தின் பிரக்யா யாதவ், தில்லி தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் தொற்றுநோயியல் பிரிவின் ஆா்த்தி பால், சிடிஎஸ்சிஓ-இன் இணை கட்டுப்பாட்டு அதிகாரி ஏ.கே.பிரதான் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்’ என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com