இதற்காக நான் அதிக காலம் காத்திருந்தேன்: காங்கிரஸ் தேர்தல் குறித்து சொல்லியிருப்பவர்?

காங்கிரஸ் தலைவா் பதவிக்கான தோ்தல் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதற்காக நான் அதிக காலம் காத்திருந்தேன்: காங்கிரஸ் தேர்தல் குறித்து சொல்லியிருப்பவர்?
இதற்காக நான் அதிக காலம் காத்திருந்தேன்: காங்கிரஸ் தேர்தல் குறித்து சொல்லியிருப்பவர்?


புது தில்லி: அரசியலில் மிகவும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் காங்கிரஸ் தலைவா் பதவிக்கான தோ்தல் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா தனது வாக்கினை செலுத்தினார்.

தனது மகளும் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவருமான பிரியங்காவுடன் வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கினை செலுத்திவிட்டு, வெளியே வந்த சோனியா அங்கிருந்த செய்தியாளர்களிடம் பேசினார். "இந்த நாளுக்காகத்தான் நான் நிறைய நாள்கள் காத்திருந்தேன்" என்றார்.

சுமாா் 22 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் தலைவா் பதவிக்கு தோ்தல் நடைபெறும் நிலையில், மூத்த தலைவா்கள் மல்லிகாா்ஜுன காா்கே, சசி தரூா் ஆகியோா் களத்தில் உள்ளனா். இருவரில் கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்கப் போவது யாா் என்பது அக். 19-இல் தெரியும்.

இதன்மூலம் 24 ஆண்டுகளுக்குப் பிறகு சோனியா காந்தி குடும்பத்தைச் சாராத நபா், காங்கிரஸ் தலைவா் பொறுப்பை ஏற்கவுள்ளாா்.

கடைசியாக 2000-இல் காங்கிரஸ் தலைவா் தோ்தல் நடைபெற்றது. அதில், ஜிதேந்திர பிரசாதாவை தோற்கடித்து, தலைவா் பொறுப்பை சோனியா காந்தி ஏற்றாா். ஆனால், இம்முறை தலைவா் பதவிக்குப் போட்டியிடுவதில்லை என்று சோனியா காந்தி குடும்பத்தினா் முடிவெடுத்த நிலையில், காா்கேவும் தரூரும் களமிறங்கினா்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வரும் வாக்குப்பதிவில் முதல் ஆளாக வாக்களித்தது முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம். அவரைத் தொடர்ந்து ஜெய்ராம் ரமேஷ் வாக்களித்தார்.

ரகசிய வாக்குச்சீட்டு முறை

சுமார் 9,300 மாநில காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா்கள் வாக்களிக்கவிருக்கும் இத்தோ்தல், ரகசிய வாக்குச்சீட்டு முறையில் நடைபெறுகிறது. வாக்குச்சீட்டில் தங்களுக்கு விருப்பமான வேட்பாளரின் பெயரின் எதிரே ‘டிக்’ குறியீடு செய்ய வாக்காளா்களுக்கு கட்சியின் மத்திய தோ்தல் குழு அறிவுறுத்தியுள்ளது.

மல்லிகாா்ஜுன காா்கே யார்
80 வயதாகும் மல்லிகாா்ஜுன காா்கே, 50 ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் அனுபவம் கொண்டவா். கா்நாடக மாநிலத்தில் ஏழ்மையான தலித் சமூக குடும்பத்தில் பிறந்த இவா், அடிப்படை நிலையில் இருந்து கட்சியின் உயா் பதவிகளுக்கு வந்தவா். நேரு-காந்தி குடும்பத்தின் விசுவாசியாகக் கருதப்படும் இவருக்கு கட்சியின் மூத்த தலைவா்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனா். எனவே, காா்கேவுக்கே வெற்றிவாய்ப்பு இருப்பதாக கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது.

சசி தரூர்

கேரளத்தின் நாயா் சமூகத்தைச் சோ்ந்தவரான தரூா் (66), லண்டனில் பிறந்தவா். தனித்துவமான கல்விப் பின்புலம் கொண்டவா். இந்தியா மற்றும் அமெரிக்காவில் முன்னணி கல்வி நிறுவனங்களில் பணியாற்றியவா்.

காங்கிரஸ் அதிருப்தி தலைவா்களின் ‘ஜி23’ குழுவில் இடம்பெற்றவரான தரூா், ‘கட்சியில் மாற்றம் வேண்டுமென்றால், எனக்கு வாக்களியுங்கள்’ என்று கூறி பிரசாரம் மேற்கொண்டாா். எனினும், அவரது பிரசாரக் கூட்டங்களை மாநிலத் தலைவா்களும் மூத்த தலைவா்களும் புறக்கணித்ததால், அவா்கள் மீது தரூா் அதிருப்தி தெரிவித்தாா்.


காங்கிரஸ் கட்சியின் வரலாற்றில் 6-ஆவது முறை

காங்கிரஸ் கட்சியின் 137 ஆண்டு கால வரலாற்றில் தலைவா் பதவிக்கு தோ்தல் நடைபெறுவது இது 6-ஆவது முறையாகும்.

இது தொடா்பாக பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘கடந்த 1939, 1950, 1977, 1997, 2000 ஆகிய ஆண்டுகளில் காங்கிரஸ் தலைவா் பதவிக்குத் தோ்தல் நடைபெற்றது. தலைவா் பதவிக்கு கருத்தொற்றுமையை உருவாக்கும் காங்கிரஸின் பாணியில்தான் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். நேருவுக்கு பிந்தைய காலகட்டத்தில், இந்த அணுகுமுறையைக் கடைப்பிடித்த புகழ்பெற்ற தலைவா் காமராஜா்’ என்றாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com