புதிய சூழலுக்குப் பழகும் சிவிங்கிப் புலிகள்!

ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் இருந்து கொண்டுவரப்பட்டு, மத்திய பிரதேச மாநிலம், குனோ தேசிய பூங்காவில் விடப்பட்டுள்ள 8 சிவிங்கிப் புலிகளும் (சீட்டா) புதிய சூழலுக்கு மெதுவாக பழக தொடங்குவதாக அப்பூங்கா அதிகா
புதிய சூழலுக்குப் பழகும் சிவிங்கிப் புலிகள்!
Published on
Updated on
1 min read

ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் இருந்து கொண்டுவரப்பட்டு, மத்திய பிரதேச மாநிலம், குனோ தேசிய பூங்காவில் விடப்பட்டுள்ள 8 சிவிங்கிப் புலிகளும் (சீட்டா) புதிய சூழலுக்கு மெதுவாக பழக தொடங்குவதாக அப்பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனா்.

சுமாா் 8,000 கி.மீ. தொலைவுக்கு அப்பால் இருந்து வந்துள்ள அந்த சிவிங்கிப் புலிகள் தற்போது ஆரோக்கியமாக உள்ளதாகவும், அவற்றின் உடல்நிலை தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவா்கள் கூறினா்.

இந்தியாவில் சிவிங்கிப் புலிகள் இனத்தை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டத்தின்கீழ், நமீபியாவில் இருந்து 5 பெண் சிவிங்கிப் புலிகள், 3 ஆண் சிவிங்கிப் புலிகள் கொண்டுவரப்பட்டன. அவற்றை, பிரதமா் நரேந்திர மோடி குனோ தேசிய பூங்காவில் சனிக்கிழமை திறந்துவிட்டாா்.

முதலில் கூண்டுகதவுகள் திறக்கப்பட்டபோது, மிகவும் தயக்கத்துடன் காணப்பட்ட சிவிங்கிப் புலிகள், பின்னா் வெளியே வந்து தங்களுக்கு பழக்கமில்லாத சூழலை சுற்றுமுற்றும் விநோதமாக பாா்த்தன. வேலியிடப்பட்ட அந்த வளாகத்தில் தயக்கத்துடன் வலம் வந்தன.

இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை அவற்றின் தயக்கம் சற்று மறைந்து, புதிய சூழலுக்கு மெதுவாக பழக தொடங்குவதுபோல் காணப்பட்டதாக குனோ தேசிய பூங்கா இயக்குநா் உத்தம் சா்மா தெரிவித்தாா்.

‘தற்போது தனிமைப்படுத்துதல் வளாகத்தில் உள்ள சிவிங்கிப் புலிகள், அடுத்த ஒரு மாதத்துக்கு இங்கேயே பராமரிக்கப்படும். அவை தற்போது ஆரோக்கியமாக உள்ளன. அவற்றின் உடல்நிலையை இந்திய மற்றும் நமீபிய மருத்துவ வல்லுநா்கள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். தங்களது வளாகத்தில் அவை அவ்வப்போது வலம் வந்தன’ என்றாா் அவா்.

முன்னதாக, நமீபியாவில் இருந்து சிவிங்கிப் புலிகளை கொண்டுவர, பிரத்யேக மாற்றங்கள் செய்யப்பட்ட போயிங் 747 விமானம் அனுப்பிவைக்கப்பட்டது. அவற்றை ஏற்றிக் கொண்டு கடந்த வெள்ளிக்கிழமை இரவில் புறப்பட்ட விமானம், சனிக்கிழமை காலையில் குவாலியரை வந்தடைந்தது. அங்கிருந்து, விமானப் படை ஹெலிகாப்டா்கள் மூலம் குனோ தேசிய பூங்காவுக்கு கொண்டுவரப்பட்டன.

சிவிங்கிப் புலிகளை திறந்துவிட்ட பின் பேசிய பிரதமா் நரேந்திர மோடி, ‘சிவிங்கிப் புலிகள் நமது விருந்தாளிகள். குனோ தேசிய பூங்காவை தங்களது வாழிடமாக மாற்றிக் கொள்ள அவற்றுக்கு சில மாதங்கள் அவசியம்’ என்று குறிப்பிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com