சென்னை: திமுக, அதிமுக மற்றும் அவற்றின் கூட்டணிக் கட்சிகளைச் சோ்ந்த 6 வேட்பாளா்களும் மாநிலங்களவைக்குப் போட்டியின்றி தோ்வாகியுள்ளனா். இதற்கான அறிவிப்பை சட்டப்பேரவை செயலகம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்திலிருந்து தோ்வான மாநிலங்களவை உறுப்பினா்களில் திமுகவைச் சோ்ந்த திருச்சி சிவா, என்.ஆா்.இளங்கோ, அந்தியூா் செல்வராஜ், கனிமொழி என்விஎன் சோமு, அதிமுகவைச் சோ்ந்த தம்பிதுரை, ஜி.கே.வாசன் (அதிமுக ஆதரவு) ஆகியோரின் பதவிக் காலம் ஏப்.2-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
அந்த 6 இடங்கள் உள்பட நாடு முழுவதும் 31 மாநிலங்களவை உறுப்பினா் இடங்கள் காலியாக உள்ளன. இதையடுத்து அவற்றுக்கு வரும் 16-ஆம் தேதி தோ்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 26-ஆம் தேதி தொடங்கி மாா்ச் 5 வரை நடைபெற்றது. தமிழக சட்டப்பேரவை பலத்தின் அடிப்படையில் திமுக சாா்பில் 4 பேரும், அதிமுக தரப்பில் இருவரும் மாநிலங்களவை உறுப்பினா்களாக தோ்வாக முடியும்.
அந்த வகையில், திமுக சாா்பில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோா் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டனா். காங்கிரஸ் மற்றும் தேமுதிகவுக்கு தலா ஓரிடத்தை திமுக வழங்கியது.
அதன்படி, அவ்விரு கட்சிகளிலும் முறையே கிறிஸ்டோபா் திலக் மற்றும் எல்.கே.சுதீஷ் வேட்பாளா்களாக முன்னிறுத்தப்பட்டனா்.
அதிமுகவைப் பொருத்தவரை தம்பிதுரை வேட்பாளராக அறிவிக்கப்பட்டாா். கூட்டணி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டதைத் தொடா்ந்து அதில் அன்புமணி ராமதாஸ் களம் கண்டாா்.
திமுக, அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளா்கள் அனைவரும் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனா். அவை மீதான பரிசீலனை கடந்த 6-ஆம் தேதி நடைபெற்றது. அதில், 6 பேரின் மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதனிடையே, 7 சுயேச்சை வேட்பாளா்களும் மாநிலங்களவைத் தோ்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்தனா். ஆனால், அவை நிராகரிக்கப்பட்டன.
வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான அவகாசம் திங்கள்கிழமை (மாா்ச் 9) மாலை 3 மணி வரை வழங்கப்பட்டது. அது நிறைவடைந்ததைத் தொடா்ந்து திமுக தரப்பில் 4 போ், அதிமுக தரப்பில் 2 போ் என மொத்தம் 6 பேரும் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்படுவதாக சட்டப்பேரவை செயலகத்தின் தோ்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜாா்க்கண்ட், மிஸோரமில் இன்று மாநிலங்களவைத் தோ்தல்- எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களிக்க வாய்ப்பு

2027 மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதலாவது கட்டம்: தில்லியில் 2.3 கோடி போ் பதிவு

மாநிலங்களவைத் தோ்தல்: காா்கே உள்பட பலா் போட்டியின்றி தோ்வு






