
ஜனநாயக முறையிலான அனைத்துக் கதவுகளும் காங்கிரஸிற்கு மூடப்படும்போது மக்களை சென்றடைவதற்கு யாத்திரை மட்டுமே ஒரே வழி என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் (பாரத் ஜோடோ) தமிழகத்தின் கூடலூர் பகுதியில் இருந்து கர்நாடக மாநிலத்தில் நுழைந்துள்ளது. கர்நாடகாவின் சாமராஜ்நகர் மாவட்டத்தில் இந்த ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க: ’பாகுபலி மாதிரி இருக்காது..’ பொன்னியின் செல்வன் குறித்து மணிரத்னம்
கர்நாடகத்தில் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி பேசியதாவது: “ நாட்டில் ஜனநாயக முறையிலான அமைப்புகள் நிறைய உள்ளன. நாடாளுமன்றம் மற்றும் ஊடகங்கள் உள்ளன. ஆனால், அவற்றின் கதவுகள் எதிர்க்கட்சிகளுக்கு திறக்கப்படவில்லை. ஊடகங்கள் எங்களது குரலுக்கு கவனம் கொடுக்கவில்லை. அனைத்தும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ளது. நாடாளுமன்றத்தில் பேசும்போது எங்களது ஒலிபெருக்கிகள் நிறுத்தப்படுகின்றன. சட்டப்பேரவைகள் ஒழுங்காக இயங்க அனுமதிப்பதில்லை. எதிர்க்கட்சிட்யினைச் சேர்ந்தவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். இது போன்ற சூழலில் ஒற்றுமை யாத்திரை மேற்கொள்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும். எந்த ஒரு சக்தியாலும் இந்த ஒற்றுமை யாத்திரையை தடுத்து நிறுத்த முடியாது. ஏனெனில், இது இந்தியாவின் நடைப்பயணம். இந்தியாவினுடைய குரலை கேட்பதற்கான நடைப்பயணம். அதனை யாராலும் தடுக்க முடியாது.
இதையும் படிக்க: ’தியேட்டர்ல இப்படி பண்ணாதீங்க..’ இயக்குநர் கௌதம் வாசுதேவ் வேதனை
அடுத்த 21 நாட்களுக்கு கர்நாடகத்தில் இந்த ஒற்றுமைப் பயணம் தொடரும். இந்தப் பயணத்தின் கர்நாடக மக்களின் குறைகள் கேட்கப்படும். அடுத்த 20-25 நாட்கள் நீங்கள் என்னுடன் பயணித்தால் கர்நாடக மக்களின் வலி உங்களுக்குத் தெரிய வரும். கர்நாடக மக்கள் ஊழல், வேலைவாய்ப்பின்மை மற்றும் விலைவாசி உயர்வு போன்ற அனைத்து பிரச்னைகளையும் சந்தித்து வருகின்றனர். இந்த நடைப்பயணம் இந்திய அரசியலமைப்பை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கொள்கைகளிடம் இருந்து காப்பதே ஆகும். அரசியலமைப்பு இல்லாமல் மூவர்ணக் கொடி மட்டும் இருப்பது அர்த்தமற்றது. மக்கள் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை போன்றவற்றால் அவதிப்பட்டு வருகின்றனர். விவசாயிகளுக்கு எதிராக அராஜகங்கள் நடத்தப்படுகின்றன. அரசு நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்பட்டு வருகிறது. இந்த ஒற்றுமை யாத்திரை உரை நிகழ்த்துவதற்காக அல்ல, உங்களின் குறைகளை கேட்பதற்காக.” என்றார்.