

மக்களவை எம்.பி. பதவியில் இருந்து அண்மையில் தகுதிநீக்கத்துக்கு உள்ளான ராகுல் காந்தி, தில்லியில் தனக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவை காலி செய்தார்.
தில்லியின் துக்ளக் லேன், எண் 12-இல் உள்ள அரசு பங்களாவில் இருந்து அவரது உடைமைகள் வெள்ளிக்கிழமை வெளியே எடுத்து வரப்பட்டு, 2 லாரிகளில் ஏற்றப்பட்டன.
பின்னா், ஜன்பத் சாலை, எண் 10-இல் உள்ள சோனியா காந்தியின் இல்லத்துக்கு ராகுலின் உடைமைகள் எடுத்துச் செல்லப்பட்டன. இதையடுத்து, இன்று அவர் அரசு பங்களாவை முழுமையாக காலி செய்துவிட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தில்லியிலேயே ராகுலுக்காக பல வீடுகள் பாா்க்கப்பட்டுள்ளதாகவும், அவா் தனது தாயாருடன் தங்கியிருக்கவும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
மோடி சமூகத்தை அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், குஜராத் மாநிலம், சூரத்தில் உள்ள நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, கடந்த மாா்ச் 23-இல் தீா்ப்பு வழங்கியது. இதைத் தொடா்ந்து, வயநாடு மக்களவைத் தொகுதி உறுப்பினா் பதவியில் இருந்து அவா் தகுதிநீக்கத்துக்கு உள்ளானாா்.
எம்.பி. பதவியை இழந்த நிலையில், தில்லியில் தனக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவை காலி செய்யுமாறு ராகுலுக்கு மக்களவைச் செயலகம் நோட்டீஸ் அனுப்பியது. அதில், ஏப். 22-ஆம் தேதிக்குள் அரசு பங்களாவை காலி செய்ய அவருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.