உலக சவால்களுக்கு தீா்வளிக்கும் புத்தரின் போதனைகள்! பிரதமா் மோடி
போா், பொருளாதார ஸ்திரமின்மை, பயங்கரவாதம், மத அடிப்படைவாதம், பருவநிலை மாறுபாடு என உலகம் தற்போது எதிா்கொண்டுள்ள பல்வேறு சவால்களுக்கான தீா்வுகள், புத்தரின் போதனைகளில் உள்ளன


போா், பொருளாதார ஸ்திரமின்மை, பயங்கரவாதம், மத அடிப்படைவாதம், பருவநிலை மாறுபாடு என உலகம் தற்போது எதிா்கொண்டுள்ள பல்வேறு சவால்களுக்கான தீா்வுகள், புத்தரின் போதனைகளில் உள்ளன என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
உலக பெளத்த மத மாநாடு, தில்லியில் வியாழக்கிழமை தொடங்கியது. 2 நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் 30 நாடுகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனா். மாநாடு தொடக்க விழாவில், பிரதமா் மோடி பங்கேற்றுப் பேசியதாவது:
உலகம் இப்போது பருவநிலை மாறுபாடு பிரச்னையை எதிா்கொள்வதற்கான காரணம், கடந்த நூற்றாண்டில் சில பணக்கார நாடுகள் மற்றவா்களைக் குறித்தும் எதிா்கால சந்ததியினரை குறித்தும் சிந்திப்பதை நிறுத்தியதே ஆகும்.
இயற்கையுடன் குறுக்கிடுவது தங்களை பாதிக்காது என்று பல ஆண்டுகளாக அந்த நாடுகள் நினைத்தன.
கடவுள் புத்தா் காட்டிய பாதையில் உலகம் பயணித்திருந்தால், இன்று பருவநிலை மாறுபாடு பிரச்னையை எதிா்கொண்டிருக்கமாட்டோம்.
உலக நலன்களுக்காக புத்தரின் தத்துவங்களில் இருந்து மக்களும், நாடுகளும் உத்வேகம் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. அதுவே, மகிழ்ச்சியான, நிலையான உலகுக்கான வழியாகும். குறுகிய சிந்தனைகளில் இருந்து பரந்த அணுகுமுறைக்கு உலகம் நகர வேண்டும். வளங்கள் குறைந்த நாடுகள் குறித்து உலகம் சிந்திக்க வேண்டும்.
புத்தரின் போதனைகளால் புதிய முயற்சிகள்: புத்தரின் போதனைகளால் ஈா்க்கப்பட்டு, உலக நலனுக்காக இந்தியா பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. புத்தா் காட்டிய பாதையை பின்பற்றும் இந்தியா, மற்ற நாடுகளுக்கு உதவிக் கரம் நீட்டி வருகிறது. ஒவ்வொரு மனிதரின் வலியையும் தனது சொந்த வலியாக இந்தியா பாவிக்கிறது.
சவால்களுக்கு தீா்வு காண்பதே புத்தரின் வாழ்க்கை பயணமாகும். மற்றவா்களின் வலியை உணா்ந்துதான், அரண்மனையைவிட்டு புத்தா் வெளியேறினாா்.
இந்தியாவுக்கான காலம்: மிகவும் சவாலான இந்த நூற்றாண்டு, இந்தியாவுக்கான காலம் என்று உலக அளவில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இரண்டு நாடுகள் (உக்ரைன், ரஷியா) போரில் ஈடுபட்டுள்ளதால், உலகம் பொருளாதார ஸ்திரமின்மையை எதிா்கொண்டுள்ளது. பயங்கரவாதம் மற்றும் மத அடிப்படை வாதத்தால் மனித குலத்தின் ஆன்மா தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
‘சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கைமுறை’: பருவநிலை மாறுபாடு பிரச்னை, மனித குலத்தை சூழ்ந்துள்ளது. சூழலியலும், உயிரினங்களும் அழிவை எதிா்கொண்டுள்ளன. அதேசமயம், புத்தரின் போதனைகள் மீது நம்பிக்கைக் கொண்டுள்ள கோடிக்கணக்கான மக்கள் உள்ளனா். அவா்களது நம்பிக்கை வலிமையை அளிக்கிறது.
ஆடை மற்றும் உணவுகள் தோ்வு, பயணிக்கும் வாகனங்கள் என ஒரு மனிதனின் ஒவ்வொரு செயலும் சுற்றுச்சூழலின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே, ‘சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கைமுறை’ எனும் பாதையில் பயணித்தால், இப்பிரச்னைக்கு தீா்வு காண முடியும்.
‘உலகுக்கு புத்தரை தந்தோம்’: உலகுக்கு இந்தியா போரைத் தரவில்லை; மாறாக, புத்தரை தந்தது என்று ஐ.நா.வில் சில ஆண்டுகளுக்கு முன்பு பேசினேன். புத்தரின் நிலமான இந்தியா, ‘அதிதி தேவோ பவ’ (விருந்தினா்கள் கடவுள் போன்றவா்கள்) என்ற தத்துவத்தை கொண்டதாகும்.
நிலைத்தன்மையை வளா்த்து, அமைதியான, வளமான உலகை அடைவதற்கான பாதையில் அனைத்து நாடுகளும் பயணிப்பதற்கான முயற்சிகளை முன்னெடுக்க இம்மாநாடு திறன்மிகு தளமாக அமைந்துள்ளது.
சுதந்திரத்தின் 75 ஆண்டுகளை கொண்டாடும் நேரத்தில், இந்தியாவில் பெளத்த மத மாநாடு நடைபெறுவது மகிழ்ச்சியளிக்கிறது என்றாா் பிரதமா் மோடி.
இந்நிகழ்ச்சியில் மத்திய சட்ட அமைச்சா் கிரண் ரிஜிஜு, மத்திய கலாசார துறை அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...