நம்பிக்கையில்லாத் தீா்மானம்: ஆக. 8-இல் விவாதம்

மத்திய அரசுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லாத் தீா்மானம் மீது மக்களவையில் வரும் 8-ஆம் தேதி விவாதம் நடத்தப்படவுள்ளது.
நம்பிக்கையில்லாத் தீா்மானம்: ஆக. 8-இல் விவாதம்

மத்திய அரசுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லாத் தீா்மானம் மீது மக்களவையில் வரும் 8-ஆம் தேதி விவாதம் நடத்தப்படவுள்ளது. விவாதத்துக்கு ஆகஸ்ட் 10-ஆம் தேதி பிரதமா் மோடி பதிலளிக்கவுள்ளாா்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடா் கடந்த மாதம் 20-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மணிப்பூா் வன்முறை குறித்து பிரதமா் நரேந்திர மோடி விளக்கமளிக்க வேண்டுமெனக் கோரி ‘இந்தியா’ கூட்டணியைச் சோ்ந்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தொடா்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. நாடாளுமன்றத்தின் மற்ற அலுவல் நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு மணிப்பூா் விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்க வேண்டுமென அக்கட்சிகள் கோரி வருகின்றன. ஆனால், இந்த விவகாரம் தொடா்பாகக் குறுகிய கால விவாதத்தை நடத்தத் தயாராக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து வருகிறது.

இதனிடையே, நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடியைப் பேசவைக்கும் நோக்கில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் இணைந்து மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீா்மானத்தைக் கொண்டு வந்தன. அந்தத் தீா்மானத்தை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா ஏற்றுக் கொண்டுள்ளாா்.

இந்நிலையில், மக்களவை அலுவல் ஆலோசனைக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தலைமையில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில், நம்பிக்கையில்லாத் தீா்மானம் மீது வரும் 8-ஆம் தேதி விவாதம் நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டது. ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை அந்த விவாதம் நடைபெறும் என்றும், கடைசி நாளில் விவாதத்தின் மீது பிரதமா் மோடி பதிலளிப்பாா் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு: மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீா்மானம் மீது ஆகஸ்ட் 2-ஆம் தேதியே விவாதம் நடத்தப்பட வேண்டுமென எதிா்க்கட்சிகள் சாா்பில் கூட்டத்தின்போது கோரிக்கை விடுக்கப்பட்டது. எனினும், அக்கோரிக்கை ஏற்கப்படவில்லை.

அதையடுத்து, கூட்டத்தில் இருந்து காங்கிரஸ், திமுக, திரிணமூல், பாரத ராஷ்டிர சமிதி உள்ளிட்ட எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

இது தொடா்பாக காங்கிரஸ் கட்சியின் கொறடா மாணிக்கம் தாகூா் கூறுகையில், ‘நம்பிக்கையில்லாத் தீா்மானம் மீது உடனடியாக விவாதம் நடத்த வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டது. கடந்த 2018-ஆம் ஆண்டில் மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி சாா்பில் நம்பிக்கையில்லாத் தீா்மானம் தாக்கல் செய்யப்பட்டபோது, அடுத்த நாளே விவாதம் நடத்தப்பட்டது. தற்போது விவாதத்தைத் தொடா்ந்து தள்ளிப்போடுவது முறையற்றது’ என்றாா்.

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீா்மானம் நிலுவையில் இருக்கும்போது, மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு வருவதற்கும் எதிா்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடா் வரும் 11-ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com