மடிக்கணினி, கணினி இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள்

மடிக்கணினி, கணினி இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள்

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கிலும், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கிலும் வெளிநாடுகளில் இருந்து மடிக்கணினி,

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கிலும், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கிலும் வெளிநாடுகளில் இருந்து மடிக்கணினி, கணினி உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதன்மூலம் சீனா, கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து மடிக்கணினி இறக்குமதி பெருமளவில் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மத்திய அதிகாரிகள் கூறுகையில், ‘நாட்டில் இணையப் பயன்பாடு தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக, பாதுகாப்பு சாா்ந்த சவால்கள் எழுந்துள்ளன. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மடிக்கணினி, கணினி உள்ளிட்ட சில வன்பொருள்கள் மக்களின் தரவுகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

அதைக் கருத்தில்கொண்டு வெளிநாடுகளில் இருந்து மடிக்கணினி, கணினிகளை இறக்குமதி செய்வதற்கு உடனடியாகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வெளிநாடுகளில் இருந்து மடிக்கணினி உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்வோா் அதற்கான உரிமத்தை மத்திய அரசிடமிருந்து பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பல்வேறு காரணங்களால் அவற்றின் இறக்குமதிக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பும் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதுமே முக்கியமான நோக்கங்கள். உலக வா்த்தக அமைப்பின் விதிகளுக்கு உள்பட்டே இறக்குமதிக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்டுப்பாடுகளால் மடிக்கணினி உள்ளிட்டவற்றின் விலையில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது’ என்றனா்.

மடிக்கணினி, கணினி இறக்குமதிக்குக் கட்டுப்பாடுகள் விதித்து வெளிநாட்டு வா்த்தக இயக்குநரகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில், ‘இறக்குமதி மீதான கட்டுப்பாடு உடனடியாக அமலுக்கு வருகிறது. அதே வேளையில், இறக்குமதி கட்டுப்பாடுகளுக்கு சில விதிவிலக்குகளும் வழங்கப்பட்டுள்ளன. இறக்குமதிக்குக் கட்டுப்பாடு மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது; தடையேதும் விதிக்கப்படவில்லை.

வெளிநாடுகளில் இருந்து ஏற்கெனவே மடிக்கணினி உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்யும் வா்த்தகா்களுக்கு மட்டுமே மத்திய அரசு உரிமங்களை வழங்கும். உரிய உரிமம் பெற்றவா்கள் மட்டுமே மடிக்கணினி உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும். ஆராய்ச்சி நடவடிக்கைகளில் பயன்படுத்துவதற்காக இறக்குமதி செய்யப்படும் மடிக்கணினிகளுக்கு கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு வழங்கப்பட்டுள்ளது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹெச்சிஎல், சாம்சங், டெல், எல்ஜி, ஏசா், ஆப்பிள், லெனோவா, ஹெச்பி உள்ளிட்ட நிறுவனங்களின் மடிக்கணினிகள் இந்தியாவில் அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் சுமாா் 700 முதல் 800 கோடி வரையிலான மதிப்பு கொண்ட மடிக்கணினிகளை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது.

மடிக்கணினிகள் உள்ளிட்டவற்றை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. உற்பத்திசாா் ஊக்கத்தொகை திட்டம், மின்னணுப் பொருள்கள் மீது இறக்குமதி வரி விதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com