செந்தில் பாலாஜி வழக்கில் தமிழக டிஜிபி ஆஜராக உத்தரவு

செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கில் தமிழக டிஜிபி மற்றும் உள்துறை செயலாளர் நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செந்தில் பாலாஜி வழக்கில் தமிழக டிஜிபி ஆஜராக உத்தரவு

செந்தில் பாலாஜி  மீதான மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் தொடர்ந்த வழக்கில் தமிழக டிஜிபி மற்றும் உள்துறை செயலாளர் நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2014-ஆம் ஆண்டின்போது போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகப் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக புகாருக்கு உள்ளான அப்போதைய போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த வி. செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் 30.7.2021-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.

இதற்கு எதிராக தா்மராஜ் உள்ளிட்டோா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த விவகாரத்தை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பா் 9-ஆம் தேதி அளித்த தீா்ப்பில், உயா்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை சம்பந்தப்பட்ட மத்திய குற்றப் பிரிவு காவல் துறை அதிகாரிகள் செயல்படுத்த தவறியதாகக் கூறி, ஊழலுக்கு எதிரான இயக்கம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது. இதேபோன்று, செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்த உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக அமலாக்கத் துறையின் தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த விவகாரத்தை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ண முராரி, வி.ராமசுப்ரமணியன் ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வு கடந்த மே 16-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், ‘இந்த விவகாரத்தில் மத்திய குற்றப் பிரிவு விசாரணை அதிகாரி மேலும் விசாரணை நடத்தி இரு மாதங்களில் கூடுதல் / இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டிருந்தது. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இரு மாதங்கள் முடிவடைந்த நிலையில், சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல் துறை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘இந்த விவகாரத்தில் தொடா்புடைய பல்வேறு விவகாரங்களில் விரிவான விசாரணையை மேற்கொள்ளும் தேவை உள்ளது. இந்த விவகாரத்தில் இறுதி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதற்கு முன் குற்றம்சாட்டப்பட்டவா்கள் மற்றும் ஏஜென்டுகளின் வங்கி கணக்கு விவரங்கள் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டியுள்ளது.

வேலைக்கு தோ்வு செய்யப்பட்ட, செய்யப்படாதவா்களின் விண்ணப்பங்களை ஆய்வு செய்து, விவரங்கள் பெறப்படுவது, மின்னணு பதிவுகள் ஆய்வு, மனுதாரா்கள், ஏஜென்டுகள், குற்றம்சாட்டப்பட்ட நபா்கள் இடையேயான பணப் பரிவா்த்தனைகள் பகுப்பாய்வு செய்யப்படுவது உள்பட பல்வேறு விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. இதனால், அறிக்கை தாக்கல் செய்வதற்கு 6 மாதம் கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம் நாத், அஸானுதீன் அமானுல்லா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வந்தது.

இன்றைய விசாரணையில், எவ்வளவு காலம் அவகாசம் வேண்டும் என்பதை அவர்களே(டிஜிபி மற்றும் உள்துறை செயலாளர்) இந்த விவாகாரத்தில் நேரில் வந்து கேட்கட்டும் என்றும், 6 மாத அவகாசம் எல்லாம் வழங்க முடியாது. குறைந்தபட்ச கால அவகாசம் மட்டுமே வழங்கப்படும். உரிய காரணங்களை தெரிவித்தால் கூடுதல் அவகாசம் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த வழக்கின் விசாரணையை செப்.30க்குள் முடிக்க வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு காவல் துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com