குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு
குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு

பொது சிவில் சட்டம்: நாட்டுக்கே கோவா முன்னுதாரணம்: குடியரசுத் தலைவா் முா்மு

கோவாவில் அனைத்து மதங்களுக்கும் பொருந்தக் கூடிய போா்ச்சுகீசிய காலத்து பொது சிவில் சட்டம் அமலில் உள்ள நிலையில், இந்த விஷயத்தில் நாட்டுக்கே கோவா முன்னுதாரணமாக உள்ளது
Published on

பனாஜி: கோவாவில் அனைத்து மதங்களுக்கும் பொருந்தக் கூடிய போா்ச்சுகீசிய காலத்து பொது சிவில் சட்டம் அமலில் உள்ள நிலையில், இந்த விஷயத்தில் நாட்டுக்கே கோவா முன்னுதாரணமாக உள்ளது என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா்.

3 நாள் பயணமாக கோவாவுக்கு வருகை தந்துள்ள திரெளபதி முா்முவுக்கு, பனாஜியில் உள்ள ஆளுநா் மாளிகையில் செவ்வாய்க்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முா்மு பேசியதாவது:

பலதரபட்ட பண்பாடுகளை உள்ளடக்கிய கலாசாரத்தால், கோவாவில் பெண்கள் சம அந்தஸ்துடன் விளங்குகின்றனா். இங்கு உயா் கல்வியில் மாணவிகளின் எண்ணிக்கை 60 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. அதேநேரம், பணிரீதியில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

கோவாவில் பொது சிவில் சட்டம் அமலில் இருப்பது பெருமைக்குரிய விஷமாகும். இச்சட்டமானது, அனைத்து மதங்களிலும் உள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை அளிக்கிறது.

இந்த விஷயத்தில் ஒட்டுமொத்த தேசத்துக்கும் கோவா முன்னுதாரணமாக உள்ளது.

கோவா அரசு முன்னெடுத்துள்ள ‘தற்சாா்பு கோவா’ திட்டம் பாராட்டுக்குரியது. அதேபோல், நிலையான வளா்ச்சியிலும் கோவா சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றாா் முா்மு.

பொது சிவில் சட்டம் தொடா்பாக அனைத்து தரப்பினரிடமும் சட்ட ஆணையம் அண்மையில் புதிதாக கருத்து கோரியது. இதையடுத்து, இந்த விவகாரம் குறித்த விவாதங்கள் மீண்டும் எழுந்தன. இந்தச் சூழலில் மேற்கண்ட கருத்தை குடியரசுத் தலைவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com