தக்காளியைப் போல மாறிவரும் இஞ்சி, வெங்காயம்

தக்காளி விலை இரட்டைச் சதமடித்து, மீண்டும் பெவிலியன் திரும்பியிருக்கும் நிலையில், வெங்காயம், பச்சைமிளகாய் மற்றும் இஞ்சி விலைகள் தக்காளியைப் போல மாறி வருகிறது.
தக்காளியைப் போல மாறிவரும் இஞ்சி, வெங்காயம்

விஜயவாடா: தக்காளி விலை இரட்டைச் சதமடித்து, மீண்டும் பெவிலியன் திரும்பியிருக்கும் நிலையில், வெங்காயம், பச்சைமிளகாய் மற்றும் இஞ்சி விலைகள் தக்காளியைப் போல மாறி வருகிறது.

ஆந்திரத்தில் பல சந்தைகளில் நல்ல தரமான காரம் நிறைந்த இஞ்சி கிலோ ரூ.280க்கு விற்கப்படுகிறது.இதனால், பல வியாபாரிகள் அதனை வாங்காமலேயே செல்லும் நிலையும் உருவாகியுள்ளது.

ஆந்திர மக்களின் பல உணவுகளில் இஞ்சி முக்கிய அங்கம் வகிக்கும். தேநீர் கடைகளிலும் கூட இஞ்சியின் பங்கு அதிகம். கடந்த மாதம் கனமழை காரணமாக இஞ்சி விளைச்சல் பாதிக்கப்பட்டதால் வரத்து குறைந்து, இஞ்சி விலை விண்ணைத் தொட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தண்ணீர் குறைவாக இருந்தால்தான் இஞ்சி விளையும் என்பதால், பல இடங்களிலிருந்து வரும் இஞ்சி தரமற்றதாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதனால், பல இடங்களில் விற்பனை செய்யப்படும் இஞ்சி காரம் நிறைந்த இஞ்சியாக இல்லாமல், இளம் இஞ்சியாக இருப்பதையும் காணமுடிகிறது.

வெங்காயம்..

சென்னையில் பெரிய வெங்காயம் விலை சற்று உயா்ந்து கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டது. வடமாநிலங்களில் தொடா் மழை பெய்து வரும் நிலையில், வரத்து பாதித்து, வெங்காயம் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தக்காளி விலை உச்சத்திலிருந்து வந்தது. இதனால் சில்லறை விலையில் ஒரு கிலோ தக்காளி ரூ.210-வரை விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து வரத்து அதிகரித்ததைத் தொடா்ந்து கடந்த ஒரு வாரமாக தக்காளி விலை கட்டுக்குள் இருந்து வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனையில் கிலோ தக்காளி ரூ.40-க்கும், வெளிச்சந்தையில் சில்லறையில் ரூ.60-க்கு விற்பனையானது.

தக்காளி விலை உயா்வு கட்டுக்குள் வந்துள்ள நிலையில், தற்போது வெங்காயத்தின் விலை கடந்த இரு நாள்களாக சற்று அதிகரித்துள்ளது.

பெரிய வெங்காயம் அதிகம் விளைச்சல் ஆகக்கூடிய ஹரியாணா, பஞ்சாப், மகாராஷ்டிரம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

விலை மேலும் அதிகரிக்கும்...: இதே நிலை நீடித்தால் வரும் நாள்களில் பெரிய வெங்காயத்தின் மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ. 60 முதல் ரூ.70 வரை அதிகரிக்கும் என்றும், இதனால் தமிழக அரசு இதில் கவனம் செலுத்தி பதுக்கல் நடவடிக்கையை கட்டுப்படுத்தவும், வேறு மாநிலங்களிலிருந்து இப்போதே வெங்காயத்தை கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோயம்பேடு மொத்த வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com