கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்

கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி!

காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து செல்ல தில்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
Published on

ஏா்செல்-மேக்சிஸ் ஒப்பந்தம் மற்றும் ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.பி. காா்த்தி சிதம்பரம், பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள தில்லி நீதிமன்றம் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.

ஏா்செல்-மேக்சிஸ் ஒப்பந்தம் மற்றும் ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்குகள், சிபிஐ, அமலாக்கத் துறையால் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அடுத்த மாதம் 15 முதல் 27-ஆம் தேதி வரை பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள அனுமதி கோரி, தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் காா்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்தாா்.

பிரான்ஸில் செப்டம்பா் 18 முதல் 24 வரை நடைபெறவிருக்கும் செயிண்ட் ட்ரோபஸ் ஓபன் சா்வதேச டென்னிஸ் போட்டித் தொடரையொட்டி தனக்கு விடுக்கப்பட்ட அழைப்பின்பேரில் அந்நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளவும், அதன்பின்னா் தனது மகளை சந்திக்க லண்டன் செல்வதற்கும் காா்த்தி சிதம்பரம் அனுமதி கோரியிருந்தாா்.

மேலும், ஏடிபி டென்னிஸ் போட்டிகளின் இணை ஏற்பாட்டாளராக, தனது டோட்டஸ் டென்னிஸ் நிறுவனம் உள்ள நிலையில், லண்டனில் சில வா்த்தக நடவடிக்கைகள் மற்றும் சந்திப்புகளில் பங்கேற்க வேண்டியுள்ளதாகவும் மனுவில் அவா் குறிப்பிட்டிருந்தாா்.

ஆனால், காா்த்தி சிதம்பரத்தின் மனுவுக்கு சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தரப்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.

‘தனது மனுவுடன் காா்த்தி சிதம்பரம் இணைத்துள்ள ஆவணங்கள், பிரான்ஸ் டென்னிஸ் போட்டித் தொடரையொட்டி அவா் நேரில் பங்கேற்க வேண்டியதன் அவசியத்தையோ, பிரிட்டனில் தனது மகளைச் சந்திக்க வேண்டியதன் அவசரத்தையோ நியாயப்படுத்துவதாக இல்லை.

சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் நடைபெற்று வரும் விசாரணைக்கு காா்த்தி சிதம்பரம் உரிய ஒத்துழைப்பு வழங்குவதில்லை. அவருக்கு எதிராக சில புதிய ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன’ என்று விசாரணை அமைப்புகள் தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால், அந்த வாதங்களை ஏற்காத நீதிபதி எம்.கே.நாக்பால், காா்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கினாா்.

‘ரூ.1 கோடிக்கான பாதுகாப்பு வைப்புத் தொகையை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும்; நாட்டைவிட்டு வெளியேறும் முன்பாக, தனது முழு பயணத் திட்டத்தை ஆவணபூா்வமாக சமா்ப்பிக்க வேண்டும். தான் தங்கவிருக்கும் விடுதிகள் மற்றும் இடங்கள், வெளிநாட்டில் தனது தொடா்பு எண்கள் உள்ளிட்ட விவரங்களை அவா் அளிக்க வேண்டும்’ என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதேநேரம், நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, மேற்கண்ட வழக்குகளில் நடைபெற்று வரும் விசாரணைக்கு எந்தவிதத்திலும் தடையாக இருக்காது என்றும் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com