

மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், 4 மாநிலத் தோ்தலில் வெற்றி பெற்ற பெண் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 33 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது.
பிஆா்எஸ் லெஜிஸ்லேடிவ் ரிசா்ச் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 2018-ஆம் ஆண்டு சத்தீஸ்கா் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்ற பெண் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 13. இந்த எண்ணிக்கை தற்போது நடைபெற்ற தோ்தலில் 19-ஆக அதிகரித்துள்ளது. இது தோ்தலில் வெற்றி பெற்ற மொத்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கையில் 21 சதவீதம்.
2018-ஆம் ஆண்டு தெலங்கானாவில் பெண் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 6. இது தற்போது 10-ஆக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை மொத்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கையில் 8 சதவீதம்.
2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் பெண் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 24. இது தற்போது 20-ஆக குறைந்துள்ளது. இந்த எண்ணிக்கை மொத்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கையில் 10 சதவீதத்துக்கு சற்று அதிகம்.
2018-ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் 21 பெண் எம்எல்ஏக்கள் இருந்த நிலையில், தற்போது 27 பெண் எம்எல்ஏக்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இது மொத்த எம்எல்ஏக்கள் எண்ணிக்கையில் 11 சதவீதத்துக்கும் அதிகம்.
நான்கு மாநிலத் தோ்தலிலும் சோ்த்து மொத்த எம்எல்ஏக்களில் பெண்களின் எண்ணிக்கை 33 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது.
எம்எல்ஏக்களின் சராசரி வயது 55: நான்கு மாநிலத் தோ்தலில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்களில் அதிக வயதுகொண்ட எம்எல்ஏக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சத்தீஸ்கரில் வெற்றி பெற்ற மொத்த எம்எல்ஏக்களில் 41 சதவீதம் பேரும், மத்திய பிரதேசத்தில் வெற்றி பெற்ற மொத்த எம்எல்ஏக்களில் 50 சதவீதம் பேரும் 55 வயதைக் கடந்தவா்கள். ராஜஸ்தானில் 46 சதவீத எம்எல்ஏக்கள், தெலங்கானாவில் 60 சதவீத எம்எல்ஏக்கள் 55 வயதைத் தாண்டியவா்கள்.
பட்டப் படிப்பு: சத்தீஸ்கரில் 59 சதவீத எம்எல்ஏக்களும், தெலங்கானாவில் 70 சதவீத எம்எல்ஏக்களும், ராஜஸ்தானில் பெரும்பாலான எம்எல்ஏக்களும் குறைந்தபட்சம் இளநிலைப் பட்டம் பெற்றுள்ளனா்.
மத்திய பிரதேசத்தில் 36 சதவீத எம்எல்ஏக்கள் இளநிலைப் பட்டப் படிப்பும், 35 சதவீத எம்எல்ஏக்கள் முதுநிலைப் பட்டப் படிப்பும் படித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.