நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்திய திரிணாமுல் காங். எம்.பி.க்கள்
நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்திய திரிணாமுல் காங். எம்.பி.க்கள்

மம்தா குறித்து சர்ச்சை கருத்து: நாடாளுமன்றத்தில் பெண் எம்.பி.க்கள் போராட்டம்!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குறித்து ஆட்சேபனைக்குரிய விதத்தில் பேசிய மத்திய அமைச்சரை கண்டித்து, திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

தில்லி : மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி குறித்து ஆட்சேபனைக்குரிய விதத்தில் பேசிய மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கை கண்டித்து, திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு இன்று(டிச.7) போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

போராட்டத்தின் போது அமைச்சர் கிரிராஜ் சிங்கை பதவியிலிருந்து நீக்க வேண்டுமென பெண் எம்.பி.க்கள் தங்கள் கைகளில் பதாகைகளை ஏந்தியபடி கோஷமிட்டனர்.

முன்னதாக கடந்த செவ்வாயன்று(டிச.10)  கொல்கத்தாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்படத் திருவிழாவில் பங்கேற்ற மம்தா பானர்ஜி, அந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சல்மான் கான், சோனாக்ஷி சின்ஹா, மகேஷ் பட், அனில் கபூர், சத்ருகன் சின்ஹா மற்றும் பலருடன் இணைந்து மேடையில் நடனமாடினார். இந்தநிலையில், மம்தா பானர்ஜி திரைப்பட விழாவில் பங்கேற்றதை குறித்து மத்திய அமைச்சர்  கிரிராஜ் சிங் ஆட்சேபனைக்குரிய விதத்தில் பேசிய கருத்து பெரும் சர்ச்சையானது. 

இதுகுறித்து பேசிய திரிணாமுல்.காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மஹுவா மொய்த்ரா, “நாட்டிலுள்ள ஒரே பெண் முதல்வரை குறித்து மத்திய அமைச்சர் அவதூறாக பேசியுள்ளார். அவருடைய பேச்சு வெட்கக்கேடானது, பெண்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு இது. இதுபோன்ற வார்த்தைகளை தான் பயன்படுத்த வேண்டுமா? இதுவே, பாஜக மற்றும் அக்கட்சியின் அமைச்சர்களிடம் உள்ள பிரச்னை. பெண்கள் அதிகாரத்தில் இருப்பதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை” என்று கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com