கடந்த 10 ஆண்டு கால சீர்திருத்தங்களால் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி: பிரதமர் மோடி

2047 ஆம் ஆண்டில், வளர்ந்த நாடாக இந்தியா மாறும்  என்று பிரதமர் மோடி  தெரிவித்துள்ளார்.
காணொலி வாயிலாக மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி
காணொலி வாயிலாக மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி
Published on
Updated on
1 min read

தில்லி :  இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(ஜிடிபி) வளர்ச்சி, நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில், 7.7 சதவிகிதமாக உயர்ந்திருப்பது, நாட்டின் பொருளாதாரம் வலுவடைந்து வருவதை பிரதிபலிக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த பத்தாண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களும் இதற்கான காரணமாக அமைந்துள்ளதாகவும், இந்த சீர்திருத்தங்கள் நாட்டின் பொருளாதார அடித்தளத்தை பலப்படுத்தியுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரம்(GIFT City) மற்றும் சர்வதேச நிதிச் சேவை மையங்கள் ஆணையம் இணைந்து நடத்திய ’இன்பினிட்டி பாரம் 2.0’ மாநாட்டில், இன்று(டிச.9) காணொலி வாயிலாக பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது,  அடுத்த சில ஆண்டுகளில், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும், 2047 ஆம் ஆண்டில், வளர்ந்த நாடாக இந்தியா மாறும். புது வடிவிலான முதலீடு, டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் புதுயுக நிதிச் சேவைகள் ஆகியன இந்த பயணத்தில் முக்கிய பங்காற்றும்.

இன்று முழு உலகமும் இந்தியா மீது நம்பிக்கை வைத்துள்ளது. 2023ல் உலக வளர்ச்சியில் 16 சதவீதம் இந்தியாவின் பங்களிப்பாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. உலகளாவிய தெற்கு பிராந்தியத்தில்  தலைமைத்துவத்தை வழங்குவதற்கு, இந்தியா வலுவான நிலையில் உள்ளதாக ஆஸ்திரேலிய பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.

கரோனா பெருந்தொற்று காலத்தில், பெரும்பாலான நாடுகள் நிதி ஒதுக்கீட்டில் மட்டுமே கவனம் செலுத்திய நிலையில், நாம் நீண்டகால வளர்ச்சி மற்றும் பொருளாதார திறனை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்தினோம். உலகில் வேகமாக வளர்ந்து வரும் நிதித்தொழில்நுட்ப சந்தைகளில் ஒன்றாக இன்று, இந்தியா திகழ்கிறது.

இன்றைய காலகட்டத்தில், உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக பருவநிலை மாற்றம் உள்ளது. உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக திகழும் இந்தியா, பருவநிலை மாற்றம் தொடர்பான கவலைகள் குறித்து அதீத கவனத்துடன் உள்ளது.

ஒவ்வொரு முதலீட்டாளருக்கும், ஒவ்வொரு நிறுவனத்திற்கும், இந்தியா பல்வேறு வாய்ப்புகளை வழங்கி வருகிறது. இந்தியாவில் வலுவான தகவல் தொழில்நுட்பத் திறமை உள்ளது. நாட்டின் தகவல் பாதுகாப்புச் சட்டங்கள், அனைத்து நாடுகளுக்கும், தொழில்களுக்கும், டிஜிட்டல் தொடர்புக்கான பாதுகாப்பு வசதியை வழங்குகின்றன.

அனைத்து பெரிய நிறுவனங்களுக்குமான உலகளாவிய திறன் மையங்களுக்கு, இந்தியா அடித்தளமாக மாறியுள்ளதற்கு, இந்திய இளைஞர்களின் திறமைக்கு நன்றி என்று பிரதமர் மோடி பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com