நாடாளுமன்றத்துக்கு வெளியே முழக்கமிட்ட பெண் யார்?

நாடாளுமன்றத்துக்கு உள்ளே இருவர் அத்துமீறிய நிலையில், வளாகத்துக்கு வெளியே முழக்கமிட்டபடி காவலர்கள் பிடித்துச் செல்லும் பெண், நீலம் ஆஸாத் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
முழக்கமிட்ட பெண் நீலம்
முழக்கமிட்ட பெண் நீலம்

புது தில்லி: நாடாளுமன்றத்துக்கு உள்ளே இருவர் அத்துமீறிய நிலையில், நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே புகைக் குண்டுகளை வீசிய  பெண்,  நீலம் ஆஸாத் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நீலம் ஆஸாத் (37) சமூக செயற்பாட்டாளர் என்றும், இவர் புது தில்லியில் கடந்த மே மாதம் மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தியபோது, சாக்ஷி மாலிக்கின் தாயாருடன் சேர்ந்து போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டுள்ளார் என்ற தகவலும் கிடைக்கப்பெற்றுள்ளது.மேலும், 2020 - 21ஆம் ஆண்டு புது தில்லியில் விவசாயிகளின் தீவிரமான போராட்டத்திலும் பங்கேற்றவர்.

இவர் ஹரியாணா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், ஹிசர் மாவட்டத்தில் உயர்கல்வி படித்து வந்தவர் என்றும் ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே புகைக் குண்டுகளை வீசியும், நாட்டில் நடக்கும் அடக்குமுறையை நிறுத்த வேண்டும் என்று  முழக்கமிட்டபடி, காவலர்களின் பிடியில் எந்த எதிர்ப்பையும் காட்டாமல் கைதாகிச் செல்கிறார் நீலம்.

ஆனால், அவர் கடைசி வரை தனது முழக்கத்தை நிறுத்தவில்லை. தான் எந்த அமைப்பையும் சேர்ந்தவர் இல்லை. தான் ஒரு இந்திய மாணவர். மணிப்பூரில், மக்களும், சிறு வியாபாரிகளும் நசுக்கப்படுகிறார்கள். மக்களுக்கு எதிரான அடக்குமுறை நிறுத்தப்பட வேண்டும் என்று தொடர்ந்து முழக்கமெழுப்பியபடி செல்வது விடியோவில் பதிவாகியிருக்கிறது.

என் பெயர் நீலம். இன்று நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து கோஷம் எழுப்பியிருக்கும் எங்களின் வலியை நீங்கள் அனைவரும் உணர வேண்டும்.

வேலைவாய்ப்பு இல்லை. இந்த அரசு ஒரு சர்வாதிகார அரசாக உள்ளது. எங்களது குரல் நசுக்கப்படுகிறது. எங்களை அடித்து உதைத்து உள்ளே அடைத்து வைக்கிறார்கள். கொடுமை செய்கிறார்கள். எங்களுக்கு வேறு எந்த வழியும் தெரியவில்லை. நான் எந்த அமைப்பையும் சேர்ந்தவர் அல்ல. விவசாயிகள், சிறு வியாபாரிகளை அடக்குமுறைக்கு உள்ளாக்குகிறார்கள். இதனால்தான் நாங்கள் இந்தப் பாதையை தேர்வு செய்தோம் என்று கோஷமெழுப்பியிருக்கிறார்.

இவருடன், நாடாளுமன்றத்துக்கு வெளியே புகைக்குண்டு வீசிய மற்றொரு நபர், மகாராஷ்டிர மாநிலம் லதூரைச் சேர்ந்த அமோல் ஷிண்டே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்துக்குள் தாக்குதல் நடத்திய இரு நபர்களின் அடையாளம் தெரிய வந்துள்ளது. ஒருவர் லக்னௌவைச் சேர்ந்த சாகர் ஷர்மா என்பதும், மற்றொருவர் மைசூருவைச் சேர்ந்த மனோரஞ்ச என்பதும் அடையாளம் வெளியிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com