மாநில பொருளாதார சுயாட்சியில் மத்திய அரசு தலையிடுவதை தவிர்க்க வேண்டும்: பினராயி விஜயன்

மாநிலத்தின் பொருளாதார சுயாட்சி மீதான அத்துமீறலை மத்திய அரசு நிறுத்தவில்லை என்றால் மாநிலம் நிதிப் பேரழிவை நோக்கிச் செல்லும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
பினராயி விஜயன் (கோப்புப் படம்)
பினராயி விஜயன் (கோப்புப் படம்)

திருவனந்தபுரம் : மாநிலத்தின் கடன் வரம்பை மத்திய அரசு குறைத்துள்ளதை எதிர்த்து கேரள அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை, மாநிலத்தில் கடுமையான நிதி நெருக்கடிக்கு வழிவகுக்கும் என்று கேரள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கேரளத்தின் கோட்டயத்தில் இன்று(டிச.14) செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது, “மாநிலத்தின் பொருளாதார சுயாட்சி மீதான அத்துமீறலை மத்திய அரசு நிறுத்தவில்லை என்றால் மாநிலம் நிதிப் பேரழிவை நோக்கிச் செல்லும். மாநிலத்தின் பொருளாதார சுயாட்சியில் அத்துமீறுவதை மத்திய அரசு தவிர்க்க வேண்டும்.

திட்டமிட்ட நகர்வுகள் மூலம் அரசமைப்பின் பொருளாதார கூட்டாட்சியை மத்திய அரசு படிப்படியாக சிதைக்கிறது. மத்திய அரசு ஆபத்தான விளையாட்டை விளையாடி வருகிறது.

இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாக்க, மாநில அரசு ஒரு தீர்க்கமான சட்ட மற்றும் வரலாற்றுப் போரில் இறங்குகிறது. இதற்கு எதிர்க்கட்சிகளும் கேரள சமூகமும் அரசுடன் நிற்க வேண்டும்.

மாநிலத்திற்கான ஜிஎஸ்டி இழப்பீடு வழங்க மத்திய அரசு தவறிவிட்டது. மேலும், வருவாய் பற்றாக்குறை மானியத்தை குறைத்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் ஆகியவை மாநிலத்தை நிதி அழுத்தத்தில் தள்ளியுள்ளன.

மத்திய அரசு எடுத்துள்ள அரசமைப்புக்கு விரோதமான மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள், மாநிலத்தை கடும் சிக்கலில் ஆழ்த்தியுள்ளது.

இத்தகைய பாரபட்சமான நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். இதுகுறித்து மத்திய அரசிடம் மாநில அரசு பலமுறை தெரிவித்தது. ஆனால், மத்திய அரசு பழிவாங்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மத்திய அரசின் இந்த பாரபட்சமான நடவடிக்கையை எதிர்த்து மாநில அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது. 

மாநில கடன் வரம்புகளை நிர்ணயிக்கும் அரசமைப்பு அதிகாரம், மத்திய அரசுக்கு இல்லை. அதேபோல, நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க, மாநிலம் நிர்ணயித்த கடன் வரம்பை குறைக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை.
இந்திய அரசமைப்பு மாநிலங்களுக்கு நிதி சுயாட்சி அளித்துள்ளது.

மத்திய அரசின் நடவடிக்கைகளால ஏற்பட்டுள்ள இந்த பொருளாதார இக்கட்டிலிருந்து மீள, மாநிலத்துக்கு ரூ.26,226 கோடி நிதி அவசரமாக தேவைப்படுகிறது” என்று அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com