பிளவுபட்ட உதடு, வாயில் டேப்.. கையில் பேட்டுடன் களத்தில்! 

பிளவுபட்ட உதடு, வாயில் டேப் சுற்றப்பட்ட நிலையில், கையில் பேட்டுடன் களமிறங்கிய பாபா இந்திரஜித் சதமடிக்காமலே ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளையடித்துவிட்டார்.
பாபா இந்திரஜித் | இன்ஸ்டாகிராம் புகைப்படம்
பாபா இந்திரஜித் | இன்ஸ்டாகிராம் புகைப்படம்


புது தில்லி: பிளவுபட்ட உதடு, வாயில் டேப் சுற்றப்பட்ட நிலையில், கையில் பேட்டுடன் களமிறங்கிய பாபா இந்திரஜித் சதமடிக்காமலே ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளையடித்துவிட்டார்.

விஜய் ஹஜாரே கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தை புதன்கிழமை நேரிலும் தொலைக்காட்சியிலும் பார்த்த ரசிகர்கள் ஒரு நிமிடம் வாயடைத்துப்போயிருப்பார்கள்.

விளையாட்டுப் போட்டியில், இன்னிங்ஸ் இடைவேளைக்கு இடையே, கீழே விழுந்து உதடு பிளவுபட்டு, உடனடியாக முதலுதவி சிகிச்சை எடுத்துக்கொண்டு மீண்டும் விளையாட மைதானத்துக்கு வந்துவிட்டார் பாபா இந்திரஜித்.

ஹரியாணாவுக்கு எதிரான போட்டியில், அவ்வணி 294 ரக்ள் எடுக்க, தமிழகம் 3 விக்கெட்டுகளை இழந்து 54 ரன்கள் மட்டுமே எடுத்து போராடிக்கொண்டிருக்கும்போதுதான் பாபா இந்திரஜித் தனது வாயில் டேப்புடன் களமிறங்கினார்.

தமிழகத்தின் வெற்றிக்காக சிறப்பாக விளையாடினாலும், அவருக்கு டேப் ஒட்டப்பட்டிருந்ததால், அதன் மீது முழு கவனத்தையும் செலுத்தி, வலியையும் தாங்கிக்கொண்டு அவர் விளையாடியதைப் பார்த்த ரசிகர்கள்.. நெஞ்சம் நெகிழ்ந்து போயினர். 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் இந்திரஜித். தமிழ்நாடு அணியும் 63 ரன்கள் வித்தியாசத்தில்  தோல்வியைத் தழுவியது. ஆனால், தமிழக அணி வீரரின் அந்த உத்வேகம் இந்த கிரிக்கெட் போட்டியை பலருக்கும் மறக்கமுடியாததாக மாற்றியது.

இந்தப் போட்டி முடிந்தபிறகுதான், கீப்பர் தினேஷ் கார்த்திக், இந்திரஜித்துக்கு என்ன நடந்தது என்பதைக் கூறினார். அவர் கீழே விழுந்து மேல் உதடு கிழிந்து, கடுமையான வலிக்கு இடையே  விளையாட வந்ததாகக் குறிப்பிட்டார்.

போட்டி முடிந்ததும், உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்த இந்திரஜித்தின் உதடுகளில் தையல் போடப்பட்டதாக அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

மேலும், தான் நலமடைய வேண்டும் என்று விரும்புவோருக்கு நன்றி தெரிவித்தும் போஸ்ட் போட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com