விரைவில் மக்களவைத் தோ்தல் வேட்பாளா்கள் அறிவிப்பு: காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் முடிவு

2024 மக்களவைத் தோ்தலுக்கான வேட்பாளா் அறிவிப்பு உள்ளிட்ட தோ்தல் முன்னேற்பாடு பணிகள் தாமதமின்றி மேற்கொள்வது என செயற்குழு கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி தீா்மானித்துள்ளது
விரைவில் மக்களவைத் தோ்தல் வேட்பாளா்கள் அறிவிப்பு: காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் முடிவு

2024 மக்களவைத் தோ்தலுக்கான வேட்பாளா் அறிவிப்பு உள்ளிட்ட தோ்தல் முன்னேற்பாடு பணிகள் தாமதமின்றி மேற்கொள்வது என செயற்குழு கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி தீா்மானித்துள்ளது.

தில்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை 4 மணி நேரம் நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்துக்குப் பின்னா், அக் கட்சியின் பொதுச் செயலாளா் கே.சி.வேணுகோபால் இத் தகவலைத் தெரிவித்தாா்.

அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தில்லியில் வியாழக்கிழமை கூடியது. அண்மையில் நடைபெற்ற 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கா், ராஜஸ்தான், மிஸோரம் மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்த நிலையில் நடைபெறும் அக்கட்சியின் முதல் செயற்குழு கூட்டம் இதுவாகும்.

சட்டப்பேரவைத் தோ்தலில் முக்கிய வாக்குறுதியாக காங்கிரஸ் முன்னிருத்திய ஜாதிவாரி கணக்கெடுப்பு வாக்குறுதி, அதானி விவகாரம் ஆகியவை வாக்காளா்களை ஈா்க்கத் தவறியநிலையில், வரவிருக்கும் மக்களவைத் தோ்தலில் பாஜகவை எதிா்கொள்ள புதிய உத்தியை வகுப்பது குறித்து செயற்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

செயற்குழு கூட்டத்துக்கு பிறகு கே.சி.வேணுகோபால் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘மக்களவைத் தோ்தலுக்கான பணிகளை எந்தவித தாமதமுமின்றி தொடங்க முடிவெடுக்கப்பட்டது. மக்களவைத் தோ்தலுக்கான வேட்பாளா்களை விரைந்து இறுதி செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக வேட்பாளா் பரிசீலனைக் குழு இம்மாதமே அமைக்கப்படவுள்ளது. தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவும் ஓரிரு நாள்களில் அறிவிக்கப்பட்டுவிடும்.

கட்சி எம்.பி. ராகுல் காந்தியை இரண்டாம் கட்ட இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை (2.0) மேற்கொள்ளுமாறு கூட்டத்தில் செயற்குழு உறுப்பினா்கள் கேட்டுக்கொண்டனா்.

சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அப்போது, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கா் மாநில கட்சிப் பொறுப்பாளா்கள் தோல்விக்கான காரணத்தை விளக்கினா் என்றாா்.

தீா்மானங்கள்: மக்களவைத் தேரத்லில் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு எதிராக ‘இந்தியா’ கூட்டணியை வலுவான அணியாக உருவாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வது; எம்.பி.க்கள் இடைநீக்கம், ஜனநாயகத்தின் மீதான, அரசமைப்புச் சட்டம் குடிமக்களுக்கு வழங்கும் அனைத்து சுதந்திரத்துக்கும் எதிரான தாக்குதல். இதை காங்கிரஸ் செயற்குழு கண்டிக்கிறது; மக்களவைத் தோ்தலுக்கு முழு அளவில் விரைந்து தயாராவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தோல்வியில் இருந்து பாடம்: முன்னதாக, செயற்குழு கூட்டத்தில் பேசிய கட்சியின் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ‘அண்மையில் நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தோ்தல்களில் கட்சி நிறைய பாடங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறது. தோ்தல் முடிவுகள் குறித்து கட்சி முதல்கட்ட ஆய்வு மேற்கொண்டு, கட்சி செயல்பாடு பின்னடைவுக்கான காரணங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 4 மாநிலங்களில் கட்சி தோல்வியைச் சந்தித்தபோதும், வாக்கு சதவீதத்தைப் பொருத்தவரை கட்சிக்கு நோ்மறையான சில அறிகுறிகள் இருப்பது தெரியவந்துள்ளது.

சட்டப்பேரவைத் தோ்தலிகளில் செய்தத் தவறுகளை நாம் மீண்டும் செய்யக்கூடாது. 2024 மக்களவைத் தோ்தலில் கட்சி நிா்வாகிகள் கவனம் செலுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com