
பெண்கள் மேம்பாடு வெறும் வாசகம் மட்டுமல்ல, விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்துள்ளார்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்திலுள்ள ரமா தேவி பெண்கள் பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கலந்துகொண்டார்.
ரமா தேவி பல்கலைக் கழகம், கல்லூரியாக இருந்தபோது திரெளபதி முர்மு 4 ஆண்டுகள் இங்கு பயின்றுள்ளார். தற்போது அவர் பயின்ற கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவிகளுக்கு பட்டமளித்தார்.
பின்னர் உரையாற்றும்போது தனது கல்லூரி நாள்களை நினைவுகூர்ந்து அவர் பேசியதாவது, இந்த கல்வி நிறுவனத்தின் ஆசிரியர்கள் என் மீது காட்டிய அன்பும் அக்கறையும் மறக்கமுடியாதது. என்னுடன் பயின்ற பல தோழிகளுடன் இன்னும் தொடர்பில் உள்ளேன்.
இந்தியாவில் பெண்களின் பங்களிப்பு அந்தக் காலத்திலிருந்தே முக்கியமானதாக இருந்துள்ளது. வீட்டு நிர்வாகம் முதல் நாட்டு நிர்வாகம், இலக்கியம், இசை, நடனம் என அனைத்துத் துறைகளிலும் பெண்கள் தங்களை நிரூபித்து வருகின்றனர். பெண்கள் மேம்பாடு இனி வெறும் வாசகமாக மட்டுமே இருக்காது. அது செயல்பாட்டுக்கு வரும். சில துறைகளில் ஆண்களை விட பெண்கள் முன்னோடியாக உள்ளனர் எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.