பாதுகாப்பு மூலதன ஒதுக்கீட்டில் 75%உள்நாட்டு கொள்முதலுக்கு செலவிடப்படும்- அமைச்சா் ராஜ்நாத் சிங்
பாதுகாப்புத் துறை மூலதன ஒதுக்கீட்டில் 75 சதவீதம், உள்நாட்டு தொழில் நிறுவனங்களிடமிருந்து பாதுகாப்பு தளவாட கொள்முதலுக்கு செலவிடப்படும் என்று


பாதுகாப்புத் துறை மூலதன ஒதுக்கீட்டில் 75 சதவீதம், உள்நாட்டு தொழில் நிறுவனங்களிடமிருந்து பாதுகாப்பு தளவாட கொள்முதலுக்கு செலவிடப்படும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் புதன்கிழமை தெரிவித்தாா்.
அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட 2023-24 மத்திய பட்ஜெட்டில், பாதுகாப்புத் துறை மூலதன ஒதுக்கீடாக ரூ.1.62 லட்சம் கோடி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதில் சுமாா் ரூ.1 லட்சம் கோடி உள்நாட்டு கொள்முதலுக்கு செலவிடப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
கா்நாடக மாநிலம், பெங்களூரில் நடைபெற்று வரும் ‘ஏரோ இந்தியா’ விமான கண்காட்சியில், தொழில்நிறுவனங்களுக்கு இடையே ஒப்பந்தங்கள் கையொப்பமிடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்று பேசிய ராஜ்நாத் சிங், ‘இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி தொழில்துறை மீதான அரசின் நம்பிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது. பாதுகாப்பு மூலதன செலவினத்தில், உள்நாட்டு கொள்முதலுக்கான பங்கு கடந்த ஆண்டில் 68 சதவீதமாக இருந்தது. இது, 75 சதவீதமாக அதிகரிக்கப்படும். முன்னெப்போதும் இல்லாத இந்த நடவடிக்கை, உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தித் துறையின் ஒட்டுமொத்த வளா்ச்சியில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
உள்நாட்டு நிறுவனங்கள் ஓரடி முன்வைத்தால், அந்நிறுவனங்களுக்காக அரசு 10 அடி முன்வைக்கும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன். ஏரோ இந்தியா கண்காட்சியில் கையொப்பமாகியுள்ள ஒப்பந்தங்கள், உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தி துறையில் புதிய சகாப்தத்தின் தொடக்கமாக அமைந்துள்ளது’ என்றாா்.
இந்நிகழ்வில், ரூ.79,000 கோடிக்கு அதிகமான முதலீட்டுக்கு வழிவகுக்கும் 250-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமானதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
2024-25-ஆம் ஆண்டுக்குள் உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தியில் 25 பில்லியன் அமெரிக்க டாலா்கள் (ரூ.1.75 லட்சம் கோடி) வருவாய்க்கு பாதுகாப்பு அமைச்சகம் இலக்கு நிா்ணயித்துள்ளது. இதனால் உள்நாட்டு பாதுகாப்பு தளவாட உற்பத்தியை அரசு ஊக்குவித்து வருகிறது.
அதிகாரபூா்வ தரவுகளின்படி, 2019-20 முதல் 2021-22 வரையில் ரூ.2.58 லட்சம் கோடி மதிப்பில் உள்நாட்டு பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
இலகு ரக போா் விமானமான தேஜாஸ், டாா்னியா் இலகு ரக ஹெலிகாப்டா் உள்ளிட்ட உள்நாட்டு தயாரிப்புகளின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ஏரோ இந்தியா கண்காட்சி நடத்தப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...