குனோ தேசிய பூங்காவில் 12 சிவிங்கிப் புலிகள் விடுவிப்பு

தென்னாப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட 12 சிவிங்கிப் புலிகள் குனோ தேசிய பூங்காவில் விடுவிக்கப்பட்டன.
குனோ தேசிய பூங்காவில் 12 சிவிங்கிப் புலிகள் விடுவிப்பு
Published on
Updated on
1 min read

தென்னாப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட 12 சிவிங்கிப் புலிகள் குனோ தேசிய பூங்காவில் விடுவிக்கப்பட்டன.

இந்தியாவில் அழிந்துபோன இனமான சிவிங்கிப் புலியை மீண்டும் அறிமுகப்படுத்தும் மத்திய அரசின் லட்சியத் திட்டத்தின்படி, நமீபியாவில் இருந்து 8 சிவிங்கிப் புலிகள் (5 பெண் சிவிங்கிப் புலிகள், 3 ஆண் சிவிங்கிப் புலிகள்) ஏற்கெனவே இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டன. கடந்த ஆண்டு செப்டம்பா் 17-ஆம் தேதி, தனது பிறந்த தினத்தில் பிரதமா் மோடி இந்த 8 சிவிங்கிப் புலிகளையும் மத்திய பிரதேச மாநிலம், குனோ தேசியப் பூங்காவில் திறந்துவிட்டாா். இப்போது 8 சிவிங்கிப் புலிகளும் நல்ல உடல்நிலையுடன் காணப்படுகின்றன.

அடுத்தகட்டமாக, தென் ஆப்பிரிக்காவில் இருந்து 7 ஆண் சிவிங்கிப் புலிகளும் 5 பெண் சிவிங்கிப் புலிகளும் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்திய விமானப் படையின் சி-17 விமானம் வியாழக்கிழமை அந்நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றது. அதன்படி அந்நாட்டின் கெளடெங் சா்வதேச விமான நிலையத்தில் இருந்து 12 சிவிங்கிப் புலிகளுடன் சி-17 விமானம் மத்திய பிரதேசத்தின் குவாலியா் விமானப் படை தளத்துக்கு சனிக்கிழமை காலை வந்தடைந்தது. 

அங்கிருந்து, சிவிங்கிப் புலிகள் விமானப் படையின் எம்ஐ-17 ஹெலிகாப்டா் மூலம் குனோ தேசிய பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டன. பின்னர் அவற்றைக மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் செளகான் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபெந்திர யாதவ் ஆகியோர் குனோ தேசிய பூங்காவில் விடுவித்தனர். அப்போது பேசியர் சிவ்ராஜ் சிங் சௌகான், மத்தியப் பிரதேசத்துக்கு மகாசிவராத்திரி பரிசு கிடைத்துள்ளது. 

பிரதமர் மோடியின் தொலைநோக்கிற்காக எனது மனமார்ந்த நன்றி. இதன்மூலம் குனோ தேசிய பூங்காவில் மொத்த சிறுத்தைகளின் எண்ணிக்கை 20 ஆகிவிடும். முன்பு வந்த சிறுத்தைகள் இப்போது நிலைமைக்கு நன்றாகத் தகவமைந்துள்ளன. சுற்றுச்சூழலையும், வனவிலங்குகளையும் பாதுகாப்பதே பிரதமர் மோடியின் லட்சியம். சிறுத்தைகள் திட்டம் அதற்கு ஒரு சிறந்த உதாரணம். சிறுத்தைகளை பாதுகாப்பாக கொண்டு வந்ததற்காக ஒட்டுமொத்த குழுவையும் நான் வாழ்த்த விரும்புகிறேன் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com