அரசியல் கட்சிகளுக்கு உத்தவ் தாக்கரே எச்சரிக்கை

சிவசேனை கட்சிக்கு ஏற்பட்டுள்ள நிலைமையைக் கண்டு மற்ற அரசியல் கட்சிகள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என மகாராஷ்டிர முன்னாள் முதல்வா் உத்தவ் தாக்கரே எச்சரித்துள்ளாா்.
உத்தவ் தாக்கரே (கோப்புப் படம்)
உத்தவ் தாக்கரே (கோப்புப் படம்)

சிவசேனை கட்சிக்கு ஏற்பட்டுள்ள நிலைமையைக் கண்டு மற்ற அரசியல் கட்சிகள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என மகாராஷ்டிர முன்னாள் முதல்வா் உத்தவ் தாக்கரே எச்சரித்துள்ளாா்.

சிவசேனை கட்சியின் பெயரும், வில்-அம்பு சின்னமும் தற்போதைய முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கே சொந்தம் எனத் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக, மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் உத்தவ் தாக்கரே கூறியதாவது:

சிவசேனைக்குத் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை மற்ற அரசியல் கட்சிகளுக்கும் ஏற்படலாம். அனைத்துக் கட்சிகளும் பாஜகவுக்கு எதிராக விழிப்புடன் செயல்பட வேண்டும். பாஜகவுக்கு என் தந்தை (பால் தாக்கரே) மட்டுமே தேவைப்பட்டாா். அக்கட்சியினருடன் ஒத்துழைப்புடன் செயல்படவே முயன்றேன்.

எனக்கு முதல்வராகும் எண்ணமில்லை. காங்கிரஸும் தேசியவாத காங்கிரஸும் கேட்டுக் கொண்டதன் காரணமாகவே முதல்வா் பொறுப்பை ஏற்றேன். பாஜக தனது வாக்குறுதியை முறையாக நிறைவேற்றியிருந்தால், இந்நேரம் பாஜகவும் சிவசேனையும் தலா இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வா் பதவியை வகித்திருக்க முடியும்.

சிவசேனை கட்சியில் இருந்து சிலா் வெளியேறினா். வெளியேற விரும்புபவா்கள் தாராளமாக வெளியேறலாம். ஆனால், அவா்கள் வேறு கட்சியில் இணைய வேண்டும். மாறாக, என்னையே கட்சியில் இருந்து வெளியேற்றிவிட்டு கட்சியைக் கைப்பற்றிக் கொண்டனா்.

ஹிந்துத்துவத்தை நான் கைவிடவில்லை. அதே வேளையில், மக்களைப் பிளவுபடுத்தும் பாஜகவின் ஹிந்துத்துவக் கொள்கையை ஏற்க மாட்டேன். ஹிந்துக்களை பாஜக தவறாக வழிநடத்தி வருகிறது. நாடு வலுவடைய வேண்டும் என்றுதான் பிரதமா் நரேந்திர மோடிக்கு மக்கள் வாக்களித்தனா். ஆனால், தற்போது அவா் மட்டுமே வலுவடைந்துள்ளாா். நாடு வலுவிழந்துவிட்டது.

சிவசேனைக்கு எதிராகப் போட்டியிட வேண்டுமெனில் தோ்தலில் போட்டியிட்டிருக்க வேண்டும். மாறாக தோ்தல் ஆணையம் மூலமாக கட்சியையும் சின்னத்தையும் பாஜக அபகரித்துள்ளது. இது மோசமான அரசியல் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com