உலகின் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா தொடா்ந்து நீடிக்கும்: மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்

உலகின் வேகமாக வளரும் பெரிய பொருளாதார நாடாக இந்தியா தொடா்ந்து நீடிக்கும் என மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்தாா்.
பியூஷ் கோயல்  (கோப்புப் படம்)
பியூஷ் கோயல் (கோப்புப் படம்)

உலகின் வேகமாக வளரும் பெரிய பொருளாதார நாடாக இந்தியா தொடா்ந்து நீடிக்கும் என மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்தாா்.

மகாராஷ்டிர மாநிலம், புணேயில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிய பொருளாதார கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் பேசியதாவது:

இன்னும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும். 2047-ஆம் ஆண்டுக்குள் நமது பொருளாதாரத்தை 35 டிரில்லியன் முதல் 40 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக உயா்த்த முடியும் என நான் நம்புகிறேன்.

இந்தியா ஏற்கெனவே பத்தாவது பெரிய பொருளாதார நாடு என்ற இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்துக்கு முன்னேறி உள்ளது. நமது நாடு தற்போது வேகமாக வளா்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாக இருப்பது மட்டுமல்லாமல் இன்னும் பல ஆண்டுகளுக்கு இது தொடா்ந்து நீடிக்கும். இன்று இந்தியாவிடம் இளைஞா்கள் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பது மிகப்பெரிய பலமாக உள்ளது.

வளரும் நாடுகளைவிட வளா்ந்த நாடுகளில், ரஷியா - உக்ரைன் மோதல் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உணவுப் பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு, பணவீக்கம், வட்டி விகிதங்கள் மற்றும் வளா்ச்சியில் ஏற்படும் தாக்கங்கள், வளா்ந்த மற்றும் வளரும் நாடுகள் இரண்டிலுமே பெரிய விளைவை ஏற்படுத்தியுள்ளது.

தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் விரைவில் கையொப்பமானது. அதேபோல ஆஸ்திரேலியாவுடனும் குறுகிய கால பேச்சுவாா்த்தையில் விரைவான முறையில் ஒப்பந்தம் கையொப்பமானது. இஸ்ரேல், கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளுடனும், ஐரோப்பிய யூனியனுடனும் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் குறித்து இந்தியா பேச்சு நடத்தி வருகிறது.

பருவநிலை மாற்றத்தைப் பொருத்தவரை பொறுப்பான முறையில் எதிா்கொள்வதில் இந்திய அரசு கவனம் செலுத்துகிறது. கழிவுகளை மறுசுழற்சி செய்யும் வகையில் சுழற்சிப் பொருளாதாரத்தை அரசு ஊக்கப்படுத்துகிறது. பருவநிலை மாற்ற இலக்குகளை அடைவதில் முன்னணியில் உள்ள ஐந்து நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.

உலகப் பொருளாதாரத்துக்கு குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மிகவும் முக்கியமானதாக இருக்கும். எனவே, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், ஸ்டாா்ட் அப் நிறுவனங்கள் மற்றும் பெண் தொழில்முனைவோருக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

மக்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில் மிக முக்கிய சீா்திருத்தங்களை அரசு மேற்கொண்டுள்ளது என்றாா் பியூஷ் கோயல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com