தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது!

தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஞாயிற்றுக்கிழமை விசாரணைக்கு ஆஜரான நிலையில், தற்போது அவரை சிபிஐ கைது செய்துள்ளது. 
தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது!

புதுதில்லி: தில்லியில் மதுபானக் கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டதில் மோசடி நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக தில்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஞாயிற்றுக்கிழமை விசாரணைக்கு ஆஜரான நிலையில், தற்போது அவரை சிபிஐ கைது செய்துள்ளது. 

தில்லியில் மதுபானக் கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டதில் மோசடி நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் இல்லம் மற்றும் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகளால் சோதனை நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவரிடம் விசாரணையும் நடைபெற்றது. மூன்று மாதங்களுக்கு முன்பாக இது குறித்து குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதமும் சோதனை நடைபெற்ற நிலையில், மணீஷ் சிசோடியாவுக்கு சிபிஐ மீண்டும் சம்மன் அனுப்பியது.

தில்லி அரசின் பட்ஜெட் தொடர்பான வேலைகள் நடந்து கொண்டிருப்பதால் மதுபானக் கொள்கை மாற்ற மோசடி வழக்கில் சிபிஐக்கு பதிலளிக்க கால அவகாசம் வேண்டுமென மணீஷ் சிசோடியா தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இரண்டாம் கட்ட விசாரணைக்கு பிப்.19 ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பிய நிலையில் மணீஷ் சிசோடியா தில்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆஜரானார்.

அவரிடம் சிபிஐ அதிகாரிகள் பல மணி நேரமாக விசாரணை நடத்தி வந்ததால் பரபரப்புகள் நிலவியது. அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. 

இந்நிலையில், தில்லியில் மதுபானக் கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டதில் மோசடி நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு வழக்கில் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ எட்டு மணி நேர விசாரணைக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை அவர் விசாரணைக்காக சிபிஐ அலுவலகத்திற்கு வருவதற்கு முன்பு, துணை முதல்வர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் வளர்ச்சியைக் கண்டு பிரதமர் நரேந்திர மோடி பயப்படுவதால், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையால் சதித்திட்டங்கள் தீட்டப்பட்டு எங்கள் கட்சி தலைவர்கள் மீது பொய் வழக்குகள் போடப்படுகின்றன. ஆம் ஆத்மி கட்சி மேலும் வளர வளர பாஜக எங்கள் மீது பொய் வழக்குகளை தொடரும் என்று சிசோடியா கூறினார், மக்கள் ஆம் ஆத்மியை பாஜகவுக்கு மாற்றாகக் கருதத் தொடங்கி உள்ளனனர். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு பயப்படாத பிரதமர், ஆம் ஆத்மி கட்சிக்கு பயப்படுகிறார்.  அவர் பயப்படுவது ஒரு கட்சி என்றால் அது ஆம் ஆத்மி கட்சிதான். அவர்கள் என்னை சிறையில் அடைக்கலாம், ஆனால் நாங்கள் பயப்பட மாட்டோம். நாங்கள் போராடுவோம். கேஜரிவால் மட்டுமே இந்த நாட்டின் எதிர்காலத் தலைவர் என்று சிசோடியா கூறினார்.

மேலும், மக்கள் நலனுக்காக தொடர்ந்து போராட வேண்டும் என்று கேஜரிவாலுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com