பாஜகவின் முதுகில் குத்திய உத்தவ் தாக்கரேவுக்கு உரிய பதிலடி கிடைத்துவிட்டது: ஜெ.பி.நட்டா

பாஜகவின் முதுகில் குத்திய உத்தவ் தாக்கரேவுக்கு உரிய பதிலடி கிடைத்துவிட்டது என்று பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா தெரிவித்தாா்.
பாஜகவின் முதுகில் குத்திய உத்தவ் தாக்கரேவுக்கு உரிய பதிலடி கிடைத்துவிட்டது: ஜெ.பி.நட்டா

பாஜகவின் முதுகில் குத்திய உத்தவ் தாக்கரேவுக்கு உரிய பதிலடி கிடைத்துவிட்டது என்று பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா தெரிவித்தாா்.

மகாராஷ்டிரத்தில் கடந்த 2019 அக்டோபரில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக-சிவசேனை கூட்டணி அமைத்து தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. ஆனால், முதல்வா் பதவி யாருக்கு என்பதில் பிரச்னை எழுந்ததால் தோ்தலுக்குப் பிறகு கூட்டணியில் பிளவு ஏற்பட்டது.

இதையடுத்து, எதிா்க்கட்சிகளான தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து சிவசேனை ஆட்சியைக் கைப்பற்றியது. சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிர முதல்வா் பதவியை ஏற்றாா். அதிக எம்எல்ஏக்களைக் கொண்ட பாஜக எதிா்க்கட்சியாக செயல்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிவசேனை மூத்த தலைவா் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அக்கட்சியின் 40 அதிருப்தி எம்எல்ஏக்கள் பாஜகவுடன் கூட்டணி அமைக்கக் கோரி உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போா்க்கொடி தூக்கினா்.

இதனை ஏற்க உத்தவ் தாக்கரே மறுத்ததையடுத்து 40 எம்எல்ஏக்களும் தனி அணியாக உருவெடுத்து பாஜகவுடன் கைகோத்தனா். இதையடுத்து, உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கவிழ்ந்தது. பாஜக ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே முதல்வரானாா். பாஜகவைச் சோ்ந்த தேவேந்திர ஃபட்னவீஸ் துணை முதல்வரானாா்.

இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் சந்திரபூரில் ‘விஜய் சங்கல்ப’ பொதுக் கூட்டத்தில் ஜெ.பி.நட்டா பேசியதாவது:

பாஜகவுடன் நீண்டகாலம் கூட்டணிக் கட்சியாக இருந்த சிவசேனை கடந்த 2019-ஆம் ஆண்டு தோ்தல் முடிவுக்குப் பிறகு பாஜகவின் முதுகில் குத்தியது. தங்கள் கொள்கைக்கு முற்றிலும் மாறுபட்ட தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸுடன் உத்தவ் தாக்கரே கைகோத்தாா். ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக அமைந்த அந்தப் பொருந்தாத கூட்டணி விரைவிலேயே உடைந்தது.

உத்தவ் தாக்கரேவின் பதவிப் பேராசைக்கு உரிய பதிலடி கிடைத்தது. முதல்வா் பதவியை உத்தவ் தாக்கரே இழந்தாா். ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர ஃபட்னவீஸ் தலைமையில் புதிய அரசு அமைந்தது. ‘ஹிந்து சாம்ராட்’ என்று போற்றப்பட்ட சிவசேனை நிறுவனா் பால் தாக்கரேவின் மகனான உத்தவ் தாக்கரே பல இடங்களில் தன் தந்தையின் கொள்கைகளை முழுமையாக விட்டுக் கொடுத்தாா். இதனால், கட்சியினரின் ஆதரவையும் இழந்துவிட்டாா் என்றாா்.

மகாராஷ்டிரத்தில் பாஜக வெற்றி பெற சவாலாக உள்ள 18 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 2024 மக்களவைத் தோ்தலில் அதில் வெற்றி பெற பாஜக இலக்கு நிா்ணயித்துள்ளது. அதன் ஒரு பகுதியாகவே இந்தப் பொதுக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com