அதிமுக பொதுக் குழு விவகாரம்: இபிஎஸ் தரப்பில் வாதம்

அதிமுக பொதுக் குழு விவகார வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு
அதிமுக பொதுக் குழு விவகாரம்: இபிஎஸ் தரப்பில் வாதம்
Updated on
2 min read

அதிமுக பொதுக் குழு விவகார வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
 அப்போது, எடப்பாடி கே.பழனிசாமி தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
 உச்சநீதிமன்றத்தில் கடந்த மூன்று முறை நடைபெற்ற விசாரணையின்போது மேல்முறையீட்டு மனுதாரர்களான வைரமுத்து, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வாதங்கள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டன.
 அவர்கள் வாதம் முடிந்த நிலையில், இந்த வழக்கு ஜனவரி 10-ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டிருந்தது.
 அதன்படி, இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
 அப்போது, எடப்பாடி கே. பழனிசாமி தரப்பில் மூத்த வழக்குரைஞர் ஆர்யமா சுந்தரம் ஆஜராகி முன்வைத்த வாதங்கள்:
 பொதுக் குழுவின் உறுப்பினர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களின் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள். கட்சியின் பல்வேறு நிலைகளிலும் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள்தான் பொதுக்குழு உறுப்பினராக வருகிறார்கள். அடிப்படை உறுப்பினர்களால் பொதுச் செயலர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதுதான் 1971 முதல் 2017-ஆம் ஆண்டு வரை கட்சியில் இருந்து வந்தது.
 ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கட்சியை வழிநடத்துவதற்காக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ஏற்படுத்தப்பட்டன. இவர்கள் இருவரும் பொதுக் குழுவால்தான் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ஒற்றை டிக்கெட் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
 இந்நிலையில், 2021-ஆம் ஆண்டு டிசம்பரில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்படி, ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் செயற்குழுவில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அது பொதுக் குழுவால் அங்கீகரிக்கப்பட வேண்டி இருந்தது.
 கட்சி விதிகளின்படி செயற்குழு பரிந்துரைக்க மட்டுமே முடியும். ஆனால், அங்கீகரிப்பதற்கான அதிகாரம் அதற்கு இல்லை.
 இந்நிலையில், ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக் குழுக் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்குவது, இடைக்கால பொதுச் செயலரைத் தேர்ந்தெடுப்பது, அதன்பிறகு கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் பொதுச் செயலர் பதவிக்குத் தேர்தல் நடத்துவது போன்ற தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன.
 ஜூன் 23-ஆம் தேதி நடைபெற்ற பொதுக் குழு கூட்டத்தில் தற்போது மேல்முறையீடு செய்த மனுதாரர்களும் பங்கேற்றிருந்தனர். அந்தக் கூட்டத்தில் கட்சியின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு ஜூலை 11-ஆம் தேதி நடைபெறவிருந்த கூட்டம் குறித்த அறிவிப்பை இடைக்கால அவைத் தலைவர் அறிவித்தார்.
 பொதுக் குழு கூட்டம் நடத்துவதற்கு பொதுவாக ஐந்தில் ஒரு பங்கு உறுப்பினர்களுடைய சம்மதம் தேவை என்ற நிலையில், அந்தக் கூட்டத்தில் 95.34 சதவீதம் பேர் இருந்தனர்.
 பொதுக் குழுவைச் சேர்ந்த மொத்தமுள்ள 2,665 உறுப்பினர்களில் 2,190 உறுப்பினர்கள் ஜூலை 11 பொதுக் குழு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
 கூட்டத்துக்கான நிகழ்ச்சி நிரலில் 2,432 உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.
 இந்நிலையில், ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன என்று வாதிட்டார்.
 இதையடுத்து, அதிமுக தலைமைக் கழகம் மற்றும் பொதுக் குழு தரப்பில் வாதங்களை முன்வைக்கும் வகையில், வழக்கு விசாரணையை நீதிபதிகள் அமர்வு புதன்கிழமைக்கு (ஜனவரி 11) ஒத்திவைத்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com