நண்பர்களுக்காக ஸ்பைஸ்ஜெட் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

தங்களது காதலிகளுடன் நேரத்தை செலவிட, விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தக் குற்றத்துக்காக இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற இரண்டு பேர் தேடப்பட்டு வருகிறார்கள்.
கோப்புப் படம்
கோப்புப் படம்


காதலிலும், போரிலும் எதுவும் நியாயம் என்பது சரியா என்றால், நிச்சயமாக அவ்வாறு ஒப்புக் கொள்ள முடியாது. அதுபோல, தங்களது காதலிகளுடன் நேரத்தை செலவிட, விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தக் குற்றத்துக்காக இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற இரண்டு பேர் தேடப்பட்டு வருகிறார்கள்.

அபிநவ் பிரகாஷ் (24), பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தில்லியிலிருந்து புணேவுக்கு செல்ல தயாராக இருந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வியாழக்கிழமை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. 

தில்லியிலிருந்து புணே செல்ல ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் எஸ்ஜி 8938 விமானம் வியாழக்கிழமை மாலை 5.35 மணிக்கு தயாராக இருந்தது. அதில் பயணிக்க இருந்த பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் பரிசோதித்துக் கொண்டிருந்தபோது, விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக ஸ்பைஸ்ஜெட் கால் சென்டருக்கு தகவல் வந்தது. இதையடுத்து விமானத்தில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா்.

அந்த விமானம் தனியாக நிறுத்தப்பட்டு, தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டனர். சிறப்புப் படையினர் விமானப் பயணிகளின் உடைமைகள் மற்றும் விமானத்தை தீவிரமாக சோதனை நடத்தினர்.

அந்த சமயத்தில் விமானத்தில் பயணிகள் யாருமில்லை. சோதனையிலும் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. அதன்பின்னா், வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.

இந்த நிலையில், வெடிகுண்டு இருப்பதாக மிரட்டிய தொலைபேசி எண்ணைக் கண்டறிந்து முகவரி உள்ளிட்ட விவரங்களை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இந்தக் குற்றத்துக்காக அபிநவ் பிரகாஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். 

விசாரணையில், அவரது நண்பர்கள் இருவரின் பெண் தோழிகள் இந்த விமானத்தில் பயணிப்பதாக இருந்ததாகவும், தனது நண்பர்கள் அவர்களது தோழிகளுடன் கொஞ்ச நேரம் கூடுதலாக செலவிட விரும்பி, தன்னை வெடிகுண்டு மிரட்டல் விடுக்குமாறுச் சொன்னதாகவும், அவர்களுக்காக இந்தக் குற்றத்ததை அவர் செய்ததாகவும் அந்த விமானம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று தாங்கள் எதிர்பார்த்ததாகவும் கூறியிருக்கிறார்.

விமானம் தாமதமாகவதை அவர்கள் கொண்டாடியதும் தெரிய வந்துள்ளது. இதற்கிடையே, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கச் சொன்ன நண்பர்கள் இருவரும், அபிநவ் கைது செய்யப்பட்டதை அறிந்ததும் தலைமறைவாகிவிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com