கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ குருவாயூரப்பன் கோயிலில் விலையுயர்ந்த கற்கள், நாணயங்கள் உள்பட 260 கிலோ தங்க நகைகள், 20 ஆயிரம் தங்க லாக்கெட்டுகள், 6,605 கிலோ வெள்ளி நகைகள் இருப்பு உள்ளதாக கோயில் நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹரிதாஸ் என்பவர் கோயில் சொத்துகள் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்.டி.ஐ.) கீழ் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்து கோயில் நிர்வாகம் இப்புதிய தகவலைத் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே இக்கோயிலின் பெயரில் ரூ.1,700 கோடி ரொக்கம் வங்கியில் முன்வைப்புத் தொகையாகச் செலுத்தப்பட்டுள்ளதாகவும், கோயிலுக்குச் சொந்தமாக 271.05 ஏக்கர் நிலங்கள் இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இப்புதிய தகவலைக் கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக ஆர்.டி.ஐ.யின் கீழ் கோயில் நிர்வாகம் வெளியிட்ட தகவலில் கூறியிருப்பதாவது:
ஸ்ரீ குருவாயூரப்பன் கோயிலுக்குச் சொந்தமாக விலையுயர்ந்த கற்கள், நாணயங்கள் உள்பட 263.637 கிலோ தங்க நகைகள் இருப்பு உள்ளன. இதுதவிர கோயிலுக்குச் சொந்தமாக 6,605 கிலோ வெள்ளி நகைகள், கழுத்தில் அணியும் நகையாக ஒரு கிராம் முதல் 10 கிராம் வரை 19,981 தங்க லாக்கெட்டுகள், வெள்ளி நாணயமாக 5 கிராம் முதல் 10 கிராம் வரை 5,359 வெள்ளி நாணயங்கள் இருப்பு உள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த நகைகளின் ஒட்டுமொத்த மதிப்பு அதில் தெரிவிக்கப்படவில்லை. இந்த நகைகளில் சில கோயில் பாரம்பரிய நகைகளாகும். அவை இதுவரை மதிப்பீடு செய்யப்படவில்லை. ஆரம்பத்தில் பாதுகாப்புக் கருதி கோயில் சொத்துகளின் விவரங்களை வெளியிட தேவஸ்வம் போர்டு மறுத்துவிட்டது.
இந்நிலையில் "புராப்பர் சேனல்' என்ற அமைப்பின் தலைவர் எம்.கே.ஹரிதாஸ் என்பவர் கோயில் சொத்துகளின் இருப்பு குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விளக்கம் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். கோயிலின் வளர்ச்சியிலும் கோயிலுக்கு வரும் பக்தர்களின் நலனிலும் அக்கறையின்றி தேவஸ்வம் போர்டு நிர்வாகம் செயல்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கோயில் நிர்வாகம் வெளியிட்ட தகவலில் கோயிலின் பெயரில் ரூ.1,737.04 கோடி முன்வைப்புத் தொகை வங்கியில் செலுத்தப்பட்டுள்ளது என்றும், கோயிலுக்குச் சொந்தமாக 271.05 ஏக்கர் நிலங்கள் உள்ளன என்றும் தெரிவித்திருந்தது.
பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட பழைமையான கோயிலாக ஸ்ரீகுருவாயூரப்பன் கோயில் திகழ்கிறது. மகாவிஷ்ணு இக்கோயிலில் கிருஷ்ணராக அருள்பாலிக்கிறார். திருச்சூர் மாவட்டம் , குருவாயூர் நகரில் உள்ள இக்கோயிலுக்கு வருடத்தில் அனைத்து நாள்களும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் அதிகமானோர் வந்து செல்கின்றனர்.