
கோத்ரா கலவரத்தின் போது, 2 குழந்தைகள் உள்பட 17 பேரைக் கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட 22 பேரை விடுதலை செய்து குஜராத்தின் பஞ்ச்மஹால் மாவட்ட ஹலோல் நகர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2002ஆம் ஆண்டு கோத்ரா கலவரத்துக்குப் பிறகு குஜராத் மாநிலத்தில் நடந்த வன்முறைவெறியாட்டத்தில் 17 பேரைக் கொலை செய்தக் குற்றச்சாட்டின் கீழ் இவர்களுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
2002ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி பயங்கர வன்முறை வெடித்து அதில் 17 பேர் கொலை செய்யப்பட்டு, சாட்சியங்களை மறைக்கும் வகையில் அவர்கள் அனைவரும் எரிக்கப்பட்டதாக வழக்கப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றத்தின் கூடுதல் அமர்வு நீதிபதி ஹர்ஷ் திரிவேதி, 22 குற்றவாளிகளையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். விசாரணையின்போதே, இந்த 22 பேரில் எட்டு பேர் இறந்துவிட்டதாக வழக்குரைஞர் கோபால்சின்ஹ சோலங்கி தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க.. மோடி மீதான கேள்வி: பிபிசியின் 2-வது ஆவணப்படம் வெளியீடு
2002-ஆம் ஆண்டு அயோத்தியிலிருந்து யாத்ரிகா்கள் மற்றும் கரசேவகா்களுடன் வந்த சபா்மதி எக்ஸ்பிரஸ், குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் நிலையம் அருகே தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் 29 ஆண்கள், 22 பெண்கள், 8 குழந்தைகள் உட்பட 59 போ் உயிரிழந்தனா்.
இதையடுத்து, மாநிலம் முழுவதும் சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை வெடித்தது. அதில், 1,200-க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டனா்.
டேலோல் கிராமத்தில் நடந்த வன்முறையில் 17 பேர் கொல்லப்பட்டு உடல்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் முதல் தகவல் அறிக்கை மட்டுமே பதிவு செய்யப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான், காவல்துறை ஆய்வாளர் புதிய வழக்குப் பதிவு செய்து, இதில் தொடர்புடைய 22 பேரை கைது செய்தார். ஆனால், இவர்களுக்கு எதிராக போதிய ஆதாரங்களைத் திரட்ட முடியாமல் போனது என்று வழக்குரைஞர் சோலங்கி தெரிவித்துள்ளார்.
அனைவரது உடல்களும் எரிக்கப்பட்டதால், உடல்களைக் கூட காவல்துறையினரால் கைப்பற்றமுடியாமல் போனதாகவும், நதிக்கரையோரம் இருந்த சில எலும்புகள் மட்டுமே கிடைத்தன. ஆனால் அதைக் கொண்டு யாரையும் அடையாளம் காண முடியாமல் போனதாக குற்றவாளிகளுக்கு எதிராக ஆதாரங்கள் கிடைக்காமல் போனதாகவும் கூறப்படுகிறது.
இதனால், போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி, குற்றவாளிகள் 22 பேரும் விடுதலை செய்யப்படுவதாகவும், அதில் 8 பேர் விசாரணையின்போதே இறந்துவிட்டதாகவும் சோலங்கி கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.