திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பொருளாதார தேவை இருப்பதால் லடாக்கில் ராணுவத்தை வலுப்படுத்துகிறது சீனா

லடாக் பிராந்தியத்தில் பொருளாதாரத் தேவை இருப்பதன் காரணமாகவே அங்கு ராணுவத்தை சீனா வலுப்படுத்தி வருவதாக ஐபிஎஸ் அதிகாரிகளின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :26 ஜனவரி 2023, 8:42 pm

DIN

லடாக் பிராந்தியத்தில் பொருளாதாரத் தேவை இருப்பதன் காரணமாகவே அங்கு ராணுவத்தை சீனா வலுப்படுத்தி வருவதாக ஐபிஎஸ் அதிகாரிகளின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாநில டிஜிபிக்களின் மாநாடு தில்லியில் கடந்த வாரம் நடைபெற்றது. அதில், ஐபிஎஸ் அதிகாரிகள் இணைந்து தயாரித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘கிழக்கு லடாக் பகுதியில் சீனாவுக்கு அதீத பொருளாதார, ராஜாங்க ரீதியிலான தேவைகள் உள்ளன. அதன் காரணமாகவே இருதரப்பு எல்லை வகுக்கப்படாத அப்பகுதியில் ராணுவத்தின் பலத்தை சீனா தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

ராணுவத்தை வலுப்படுத்தி இந்திய எல்லைப் பகுதியை ஆக்கிரமிக்க சீனா முயற்சிக்கிறது. பொருளாதார சாலைத் திட்டத்தை சீனா நடைமுறைப்படுத்தி வருகிறது. அத்திட்டமானது லடாக் பகுதியில் சாலைக் கட்டமைப்புகளை மேம்படுத்த சீன ராணுவத்துக்கு வழிவகுக்கிறது. அச்சாலை வழியாக சீனத் தயாரிப்புகள் மத்திய ஆசிய சந்தைகளைச் சென்றடையும்.

அதைக் கருத்தில்கொண்டு கிழக்கு லடாக் பகுதிகளை ஆக்கிரமிக்க சீனா நினைக்கிறது. லடாக் பகுதி வரலாற்று ரீதியில் இந்தியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. எனினும், 1962 முதல் லடாக் பிராந்திய பகுதிகளை சிறிது சிறிதாக இந்தியா இழந்து வருகிறது. அப்பகுதிகளில் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்தியா போதிய கவனம் செலுத்தாததே அதற்கு முக்கியக் காரணம்.

கிழக்கு லடாக் பகுதிகளில் சுற்றுலா நடவடிக்கைகளை அரசு அதிகரிக்க வேண்டும். அப்பகுதிகளில் மனித நடமாட்டம் தொடா்ந்து இருக்கும்போது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் பெருமளவில் குறையும். லடாக்கின் டெம்சோக், கோயுல், டங்டி, கக்ஜங் உள்ளிட்ட கிராமங்களில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்துவதோடு பழங்குடியின விழாக்களையும் அரசு நடத்த வேண்டும்.

டெம்சோக் கிராமத்தில் உள்ள சிறிய கைலாஷ் என்ற இடத்தை சுற்றுலாப் பயணிகளுக்காக அரசு திறக்க வேண்டும். மத ரீதியிலான சுற்றுலா நடவடிக்கைகளையும் லடாக்கில் அதிகரிக்கலாம். நாட்டின் எல்லைப் பகுதிகளுக்கு அருகே மக்கள் அதிக எண்ணிக்கையில் வசிப்பது நாட்டின் பாதுகாப்புக்குப் பெரும் பலமாக அமையும்.

அதே வேளையில், எல்லைப் பகுதிகளில் ராணுவ வீரா்களின் கண்காணிப்புப் பணிகளைத் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு மாற்றியமைக்க வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்டவற்றை அதிக எண்ணிக்கையில் பொருத்தி கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும். அனைத்து வானிலை வசதிகளையும் எதிா்கொள்ளும் வகையில் தொழில்நுட்பக் கருவிகள் எல்லைப் பகுதிகளில் பொருத்தப்பட வேண்டும். அதற்குத் தேவையான முதலீட்டை சுற்றுலா மூலமாகவே அரசு ஈட்டலாம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.