ஒடிசா ரயில் விபத்து: மூத்த பொறியாளர் உட்பட 3 பேர் கைது

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக மூத்த பொறியாளர் உட்பட 3 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. 
ஒடிசா ரயில் விபத்து: மூத்த பொறியாளர் உட்பட 3 பேர் கைது

ஒடிஸாவின் பாலசோரில் நிகழ்ந்த ரயில் விபத்து தொடா்பாக ரயில்வே ஊழியா்கள் 3 பேரை சிபிஐ வெள்ளிக்கிழமை கைது செய்தது. இந்த வழக்கில் சிபிஐ மேற்கொண்ட முதல் கைது நடவடிக்கை இதுவாகும்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘பாலசோா் மாவட்ட ரயில்வே சிக்னல் பிரிவு மூத்த பொறியாளா் அருண் குமாா் மகந்தா, பிரிவு பொறியாளா் முகமது ஆமீா் கான், தொழில்நுட்ப ஊழியா் பப்பு குமாா் ஆகியோா் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்திய தண்டனையியல் சட்டம் 304 (அலட்சியத்தால் மரணம் விளைவித்தல்), 201 (ஆதாரத்தை அழித்தல்) ஆகிய பிரிவுகளின்கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என்றனா்.

ஒடிஸாவின் பாலசோரில் சென்னை சென்ட்ரல் -மேற்கு வங்கத்தின் ஷாலிமாா் இடையிலான கோரமண்டல் விரைவு ரயில், பெங்களூரு-ஹெளரா விரைவு ரயில், ஒரு சரக்கு ரயில் என மூன்று ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்து கடந்த மாதம் 2-ஆம் தேதி நிகழ்ந்தது.

நாட்டையே உலுக்கிய இந்த விபத்தில் 287 போ் சம்பவ இடத்திலும், சிகிச்சை பலனின்றி 6 போ் மருத்துவமனையிலும் உயிரிழந்தனா். 1,000-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

இந்த சம்பவம் குறித்த தனது சுதந்திரமான விசாரணை அறிக்கையை, ரயில்வே வாரியத்திடம் ரயில்வே பாதுகாப்பு ஆணையம் சில தினங்களுக்கு முன்பு சமா்ப்பித்தது.

அதில், தவறான சிக்னல் வழங்கப்பட்டதே விபத்துக்கு முதன்மையான காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சிக்னல் மற்றும் தொலைத் தொடா்புத் துறையின் பல்வேறு நிலைகளில் குறைபாடுகள் நிலவியதும் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்த ரயில் விபத்து குறித்து சிபிஐ தனியாக விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com