விஞ்ஞானியிடம் ஹனி டிராப்: ஏவுகணை ரகசியங்களைப் பெற்ற பாகிஸ்தான் பெண் உளவாளி

இந்திய விஞ்ஞானியை ஏமாற்றி பாகிஸ்தான் உளவாளி பெண், இந்திய ஏவுகணை ரகசியங்களை முறைகேடாக அறிந்துகொண்டதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விஞ்ஞானியிடம் ஹனி டிராப்: ஏவுகணை ரகசியங்களைப் பெற்ற பாகிஸ்தான் பெண் உளவாளி

புனே: ஹனி டிராப் முறையில், இந்திய விஞ்ஞானியை ஏமாற்றி பாகிஸ்தான் உளவாளி பெண், இந்திய ஏவுகணை ரகசியங்களை முறைகேடாக அறிந்துகொண்டதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர காவல்துறையின் பயங்கரவாத  ஒழிப்புப் படை, இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) விஞ்ஞானி குருல்கருக்கு எதிராக தாக்கல் செய்திருக்கும் குற்றப்பத்திரிகையில் இந்த தகவல் பதிவாகியிருக்கிறது.

புனேவில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ஒரு ஆய்வுக்கூடத்தின் இயக்குநராக இருந்தவர் குருல்கர்.

அதிகாரப்பூர்வ ரகசியங்களை வெளிப்படுத்தியக் குற்றத்தின் கீழ் மே 3ஆம் தேதி இவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். 

பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் உளவாளி, தன்னை ஸரா தாஸ்குப்தா என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, குருல்கரிடம் வாட்ஸ்ஆப் கால் மற்றும் விடியோ கால் மூலம் பேசிப் பழகியிருக்கிறார்.

பிரிட்டனில் மென்பொருள் பொறியாளராக இருப்பதாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஸரா, மோசமான தகவல்கள் மற்றும் விடியோக்களை அனுப்பி, குருல்கரின் நட்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளார். ஆனால், விசாரணையின்போது, ஸரா பயன்படுத்திய ஐபி எண் பாகிஸ்தானிலிருப்பதை உறுதி செய்திருப்பதாகவும் பயங்கரவாதத் தடுப்புப் படை தாக்கல் செய்திருக்கும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் உளவாளி, பிரம்மோஸ் ஏவு தளம், டிரோன், யுசிவி, அக்னி ஏவுகணை ஏவுதளம் உள்ளிட்ட பல்வேறு ரகசியங்களை அறிந்துகொள்வதற்கு முயற்சித்துள்ளார்.

குருல்கர், ஸாராவின்பால் ஈர்க்கப்பட்டு, மிக ரகசியமான விவரங்களை தனது கைப்பேசியில் பதிவு செய்து, அதனை அவருக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

இவர், நிலத்திலிருந்து வானத்திலிருக்கும் இலக்கைத் தாக்கும் ஏவுகணை, டிரோன்கள், பிரம்மோஸ், அக்னி ஏவுகணை உள்ளிட்ட பல விவரங்களை ஸராவுடன் பகிர்ந்துகொண்டுள்ளார். இவர்கள் இருவரும் 2022ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து டிசம்பர் வரை தொடர்பில் இருந்துள்ளனர்.

இவரது நடத்தையில் சந்தேகம் அடைந்த டிஆர்டிஓ அமைப்பு, விசாரணையைத் தொடங்கிய நிலையில், குருல்கர், 2023ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஸராவின் எண்ணை துண்டித்துவிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com