மணிப்பூர் வன்முறை... ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீா்மானம்: உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் - இந்தியா கண்டனம்

இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் இதுபோன்ற தலையீடுகளை ஏற்க முடியாது என்று வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் வன்முறை... ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீா்மானம்: உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் - இந்தியா கண்டனம்

புது தில்லி: மணிப்பூரின் வன்முறை குறித்து ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை "காலனித்துவ மனநிலையின்" பிரதிபலிப்பு என்று தெரிவித்துள்ள இந்தியா, இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் இதுபோன்ற தலையீடுகளை ஏற்க முடியாது என்று வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.

மணிப்பூரின் மக்கள்தொகையில் சுமார் 53 சதவிகிதமான மைதேயி சமூகத்தினர் இம்பால் பள்ளத்தாக்கிலும், அதே சமயம் குகி பழங்குடியினா் 40 சதவிகிதத்தினர் பெரும்பாலும் மலை மாவட்டங்களில் வாழ்கின்றனர்.

இந்த நிலையில் மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடியினா் அந்தஸ்து வழங்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்து குகி பழங்குடியினா் நடத்திய போராட்டம் இனக் கலவரமாக மாறி மே 3 ஆம் தேதி வன்முறை வெடித்தது. கடந்த 2 மாதங்களில் 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் பல ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர். வன்முறையை கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

இந்த நிலையில் பிரான்ஸின் ஸ்ட்ராஸ்பேர்க்கில் நகரில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில், வியாழக்கிழமை மணிப்பூரின் தற்போதைய நிலை என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. அப்போது, மணிப்பூரில் நடைபெறும் இன மற்றும் மத வன்முறைகளைத் தடுக்கவும், "அனைத்து மத சிறுபான்மையினரையும் பாதுகாக்கவும்" நடவடிக்கைகளை எடுக்குமாறு இந்திய அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஐரோப்பிய நாடாளுமன்ற தீா்மானம் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி கூறியதாவது:

"ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் மணிப்பூரில் உள்ள வளர்ச்சிகள் குறித்து விவாதம் நடைபெற்றதோடு, அவசரத் தீா்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது "காலனித்துவ மனநிலையின்" பிரதிபலிப்பு. "இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் இத்தகைய தலையீடு ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அவர் கூறினார். 

மணிப்பூரில் சட்டம்-ஒழுங்கை நிலைநிறுத்தி அமைதி திரும்ப வேண்டி நீதித் துறை உள்பட அனைத்துநிலைகளிலும் உள்ள அரசு அதிகாரிகளும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

மேலும், ஐரோப்பிய நாடாளுமன்றம் தனது நேரத்தை மிகவும் பயனுள்ள வகையில், அதன் உள்நாட்டு பிரச்னைகளுக்காகப் பயன்படுத்த அறிவுறுத்துகிறோம்’ என்றாா் அவா்.

பாஸ்டில் தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமா் நரேந்திர மோடிஇரண்டு நாள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ள நிலையில், அந்நாட்டின் ஸ்டிராஸ்பா்கில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தில், மணிப்பூரின் வன்முறை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com