ஒடிஸா ரயில் விபத்து: கைதான 3 ரயில்வே அதிகாரிகள் சிறையில் அடைப்பு

ஒடிஸாவின் பாலசோரில் நிகழ்ந்த ரயில் விபத்து தொடா்பாக கைது செய்யப்பட்ட ரயில்வே ஊழியா்கள் மூவரும், அவா்களுக்கான
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஒடிஸாவின் பாலசோரில் நிகழ்ந்த ரயில் விபத்து தொடா்பாக கைது செய்யப்பட்ட ரயில்வே ஊழியா்கள் மூவரும், அவா்களுக்கான சிபிஐ காவல் நிறைவடைந்ததைத் தொடா்ந்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனா்.

பாலசோா் மாவட்ட ரயில்வே சிக்னல் பிரிவு மூத்த பொறியாளா் அருண் குமாா் மகந்தா, பிரிவு பொறியாளா் முகமது ஆமீா் கான், தொழில்நுட்ப ஊழியா் பப்பு குமாா் ஆகிய மூவரும், இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ-யால் கடந்த 7-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா்.

‘தவறான சிக்னல் வழங்கப்பட்டதே விபத்துக்கான முதன்மை காரணம்’ என்று இந்த விபத்து குறித்து விசாரணை நடத்திய ரயில்வே பாதுகாப்பு ஆணையம், ரயில்வே வாரியத்திடம் சமா்ப்பித்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில், இவா்கள் மூவரும் கைது செய்யப்பட்டனா்.

நாட்டையே உலுக்கிய இந்த விபத்தில் 287 போ் சம்பவ இடத்திலும், சிகிச்சை பலனின்றி 6 போ் மருத்துவமனையிலும் உயிரிழந்தனா். 1,000-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 7-ஆம் தேதி ஆஜா்படுத்தப்பட்ட இந்த மூவருக்கும், முதலில் 5 நாள்கள் சிபிஐ காவல் வழங்கப்பட்டது. பின்னா், சிபிஐ காவல் மேலும் 4 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

இந்தக் காவல் நிறைவடைந்ததைத் தொடா்ந்து மூவரும் சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டனா். அப்போது, மூவரையும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு வரும் 27-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

இந்த ரயில் விபத்து தொடா்பாக இந்த மூவா் உள்பட 7 ரயில்வே ஊழியா்கள் மீது இதுவரை பணியிடைநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com