பெண் அதிகாரிகளை பாலியல் உறவுக்கு அழைத்த பாஜக தலைவரின் ஆபாச விடியோ: விசாரணை தொடங்கியது குற்றப் பிரிவு!

பெண் அரசு அதிகாரிகளை மிரட்டி தவறான உறவுக்கு அழைத்த பாஜக முன்னாள் எம்.பி. கிரித் சோமையாவின் ஆபாச விடியோ விவகாரம் குறித்து மும்பை குற்றப் பிரிவு போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 
பெண் அதிகாரிகளை பாலியல் உறவுக்கு அழைத்த பாஜக தலைவரின் ஆபாச விடியோ: விசாரணை தொடங்கியது குற்றப் பிரிவு!


மும்பை:  பெண் அரசு அதிகாரிகளை மிரட்டி தவறான உறவுக்கு அழைத்ததாக வெளியான பாஜக முன்னாள் எம்.பி. கிரித் சோமையாவின்  ஆபாச விடியோ விவகாரம் குறித்து மும்பை குற்றப் பிரிவு போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 

மகாராஷ்டிர மாநில பாஜக துணைத் தலைவரும், பாஜக முன்னாள் எம்.பி.யுமான கிரித் சோமையா, பெண் அரசு அதிகாரிகள் உள்பட பல பெண்களை மிரட்டி தனது ஆசைக்கு இணங்க வைத்ததாகவும் தவறான உறவுக்கு அழைத்ததாகவும், ஆசைக்கு பணியாதவர்களிடம் அமலாக்கத் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பயமுறுத்துவது என மொத்தமாக 8 மணி நேரம் ஓடக்கூடிய 35 விடியோக்களை மராத்தி செய்தி சேனல் ஒன்று திங்கள்கிழமை வெளியிட்டு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

இந்த விடியோ வெளியானதும் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

இந்த விடியோ விவகாரத்தை சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் எழுப்பியதை அடுத்து, அந்த மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், சோமையா விடியோக்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்த உயர்நிலை விசாரணைக் குழு அமைக்கப்படும். யாரும் பாதுகாக்கப்பட மாட்டார்கள். (பாதிக்கப்பட்ட) பெண்ணின் அடையாளத்தை போலீசார் கண்டுபிடிப்பார்கள் என்று கூறினார். 

இதனிடையே, ஆபாச விடியோ விவகாரத்தில் சிக்கியுள்ள சோமையா, தேவேந்திர பட்னாவிஸுக்கு ட்வீட் செய்தார்.  அதில், தான் பெண்களிடம் தவறாக நடந்துகொள்ளவில்லை. ஒரு மராத்தி சேனல் என்னுடைய விடியோ கிளிப்பை வெளியிட்டுள்ளது. அந்த விடியோக்களின் நம்பகத்தன்மை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பட்னாவிஸிடம் வலியுறுத்தினார். நான் எந்த பெண்ணிடமும் தவறாக நடந்துகொள்ளவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். 

இந்த நிலையில், மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய மகாராஷ்டிர மாநில பாஜக துணைத் தலைவர் கிரித் சோமையாவின் ஆபாச விடியோக்கள் குறித்த விசாரணையை மும்பை குற்றப்பிரிவு போலீசார் தொடங்கியுள்ளனர்.  

விடியோவின் உண்மைத் தன்மை மற்றும் முழு சம்பவம் குறித்து குற்றப்பிரிவு விசாரணை தொடங்கியுள்ளோம். விசாரணைக்கு உதவ தொழில்நுட்ப மற்றும் குற்றப்பிரிவு நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என்றும்  மூத்த அதிகாரிகளின் மேற்பார்வையில், விடியோ பதிவுகளில் முறைகேடு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்று காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

ஒரு பெண்ணை இழிவுபடுத்தும் வகையில் இந்த விடியோ உருவாக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டுகள் இருப்பதால், அந்த விடியோவில் இடம்பெற்றுள்ள பெண்ணைக் கண்டுபிடித்து விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com