

புது தில்லி: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தரப்பில் இரண்டு நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ்கள் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில் 2019ஆம் ஆண்டு பிரதமர் மோடி பேசிய விடியோ ஒன்றை பாஜகவினர் வைரலாக்கியுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி அப்போதே துல்லியமாகக் கணித்துள்ளார் என்று பாஜகவினர் கூறி வருகிறார்கள்.
2019ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடியின் விடியோதான் அது. அதில், பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகள் 2023ஆம் ஆண்டு மீண்டும் ஒரு நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வருவார்கள். அதற்கு முந்தைய ஆண்டு, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை தனது அரசு முறியடித்ததையும் அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிக்க.. திமுக ஃபைல்ஸ் 2: விடியோ வெளியிட்டார் அண்ணாமலை
மேலும் பிரதமர் உரையில், நான் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். 2023ஆம் ஆண்டில், மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு முழுமையாகத் தயாராகுங்கள் என்று மக்களவையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த உரையைக் கேட்ட ஆளுங்கட்சி எம்.பி.க்கள் கலகலவென சிரிப்பொலியை எழுப்பியும், மேசையை பலமாகத் தட்டியும் வரவேற்பு தெரிவித்திருந்தனர்.
மக்களுக்கு சேவை செய்யவே, இந்த இடத்தில் நாம் அமர்ந்திருக்கிறோம். அகங்காரத்தின் விளைவால், 400 ஆக இருந்த நீங்கள், இப்போது 40 ஆக குறைந்துவிட்டீர்கள். இன்று நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று பாருங்கள் என்று காங்கிரஸ் கட்சியை பெயர் குறிப்பிடாமல் கூறியிருந்தார் பிரதமர் மோடி.
இந்த உரையின்போது, காங்கிரஸ் எம்.பி.க்களுடன் சோனியா காந்தியும் அவையில் இருந்தார்.
2018ஆம் ஆண்டு, நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில், ஆளுங்கட்சி வெற்றி பெற்றிருந்தது. தற்போது இந்த விடியோவை, பாஜகவினர், பிரதமர் மோடி முன்பே கணித்திருக்கிறார் என்று கூறி பகிர்ந்து வருகிறார்கள்.
தற்போது மணிப்பூர் விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.