/

வெள்ள மீட்புப் பணியில் 33 ஆண்டுகளுக்குப் பின் தாயைப் பார்த்த தன்னார்வலர்

வெள்ள மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த தன்னார்வலர் ஜக்ஜித் சிங், தனது வாழ்வில் பல ஆச்சரியங்களை சந்தித்திருப்பார். ஆனால், அன்றைய தினம் அவர் அடைந்த ஆனந்த அதிர்ச்சிக்கு அளவேயில்லை.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 2:44 am

DIN


பாட்டியாலா: வெள்ள மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த தன்னார்வலர் ஜக்ஜித் சிங், தனது வாழ்வில் பல ஆச்சரியங்களை சந்தித்திருப்பார். ஆனால், அன்றைய தினம் அவர் அடைந்த ஆனந்த அதிர்ச்சிக்கு அளவேயில்லை.

காணாமல் போன தனது தாய் ஹர்ஜித் கௌரை 33 ஆண்டுகளுக்குப் பிறகு, நேருக்கு நேர் சந்தித்திருக்கிறார் ஜக்ஜித் சிங்.

கடந்த வாரம் பாட்டியாலா கிராமத்தில் வெள்ள மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஜக்ஜித் சிங், கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது மூதாதையரின் வீட்டில், தனது தாயை நேருக்கு நேர் சந்திக்கிறார். இது குறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்திலும், தான் உணர்ச்சிப்பெருக்கால் குதூகலித்ததை என்னால் கட்டுப்படுத்தவே முடியவில்லை என்று விளக்கியிருக்கிறார். இருவரும் ஆனந்தக் கண்ணீரில் நனைந்தனர்.

ஜக்ஜித் ஆறு மாதக் குழந்தையாக இருந்த போது அவரது தந்தை இறந்துவிடுகிறார். இதனால் ஹர்ஜித் மறுமணம் செய்து கொள்ள, அவரது தந்தை வழி தாத்தா -பாட்டி ஜக்ஜித்துக்கு 2 வயது இருக்கும் போது தங்களுடன் எடுத்துச் செல்கிறார்கள்.  வளரும் போது, அவரது தாய்-தந்தை இறந்துவிட்டதாகக் கூறியிருக்கிறார்கள்.

இந்த நிலையில், வளர்ந்து பெரியவனான பிறகு, வெள்ள மீட்புப் பணிக்காக இவர் பாட்டியாலா வந்துள்ளார். இந்த தகவல் அறிந்த தனது உறவினர் ஒருவர், தனது தாயின் சொந்த ஊர் பாட்டியாலாதான் என்றும், தாய் வழி தாத்தா-பாட்டி இங்கு வசிக்கலாம் என்றும் கூறியிருக்கிறார்.

உடனடியாக தனக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், தாத்தா வீட்டை தேடிக் கண்டுபிடித்த அங்கிருந்த பாட்டியிடம் தனது தாய் குறித்து கேட்டபோதுதான், அவருக்கும், முதல் திருமணத்தின்போது ஒரு ஆண் குழந்தை இருந்ததே நினைவுக்கு வருகிறது. 

இதைக் கேட்டு நான் கதறி அழுதேன். என் தாய் உயிருடன் இருந்தும் கூட, அவரை 33 ஆண்டுகளாக பார்க்க முடியாத துரதிருஷ்டசாலியாக இருந்தேனே என்று கதறி அழுதேன். பிறகு, எனது தாயை சந்தித்தேன். அப்போதுதான், எங்கள் குடும்ப புகைப்படம் ஒன்றில், யார் என்று தெரியாமல் ஒரு பெண்ணின் புகைப்படம் இருப்பதையும், அதுதான் தனது தாய் என்பதையும் தற்போது அறிந்து வேதனை அடைந்ததாகவும் கண்ணீருடன் கூறுகிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.