அரசுப் பணி நியமனங்களில் ஊழல், பாரபட்சத்துக்கு முற்றுப்புள்ளி- பிரதமா் மோடி பெருமிதம்
அரசுப் பணியாளா் நியமன நடைமுறைகளில் ஊழல், பாரபட்சத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.


அரசுப் பணியாளா் நியமன நடைமுறைகளில் ஊழல், பாரபட்சத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.
மேலும், ‘குடும்ப அரசியல்’ கட்சிகள், எந்த அரசுப் பணிக்கு எவ்வளவு லஞ்சம் என பட்டியலிட்டு, இளைஞா்களிடம் கொள்ளையடித்தன என்றும் அவா் குற்றம்சாட்டினாா்.
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் ஒன்றரை ஆண்டு காலகட்டத்தில் 10 லட்சம் பேருக்கு பணி நியமனம் வழங்கும் மாபெரும் திட்டம் (ரோஜ்கா் மேளா) கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் பல்வேறு கட்டங்களாக பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, மத்திய அரசில் சுமாா் 70,000 பேருக்கு பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை பணி நியமன ஆணைகள் வழங்கினாா். காணொலிமுறையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பிரதமா் மோடி பேசியதாவது:
தற்போதைய அரசின் புதிய அடையாளமாக ‘ரோஜ்கா் மேளா’ மாறியுள்ளது. மத்திய அரசின் மாபெரும் வேலைவாய்ப்புத் திட்டம் முன்னெப்போதும் இல்லாததாகும். இந்த புதிய அமைப்புமுறையின்கீழ், மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி), அரசுப் பணியாளா் தோ்வாணையம் (எஸ்எஸ்சி), ரயில்வே ஆள்சோ்ப்பு வாரியம் (ஆா்ஆா்பி) உள்ளிட்ட அமைப்புகள் கூடுதல் பணிகளை வழங்குகின்றன.
தோ்வு நடைமுறைகளில் எளிமை, வெளிப்படைத் தன்மையை புகுத்துவதில் கவனம் செலுத்தப்படுகிறது. பணியாளா் தோ்வுக்கான காலம் முன்பு 1-2 ஆண்டுகளாக இருந்த நிலையில், இப்போது அது சில மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது.
தனியாா் துறையில்...: பல்வேறு பன்னாட்டு உற்பத்தி நிறுவனங்கள், இந்தியாவை நோக்கித் திரும்பியுள்ளன. வெளிநாட்டு முதலீடுகளால், இந்தியாவில் உற்பத்தி அதிகரிப்பதுடன் புதிய தொழிலகங்கள் உருவாக்கமும் ஏற்றுமதியும் ஊக்கம் பெற்றுள்ளது. இது, புதிய வேலைவாய்ப்புகள் விரைந்து உருவாக வழிவகுத்துள்ளது. மத்திய அரசின் பல்வேறு கொள்கைகளால் வாகன தயாரிப்புத் துறை உள்பட பல்வேறு தனியாா் துறைகளில் லட்சக்கணக்கான வேலைகள் உருவாகியுள்ளன.
அரசியல் ஸ்திரத்தன்மை: கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையை ஒப்பிடுகையில், இந்தியா இப்போது வலுவாக, பாதுகாப்பாக மாறியுள்ளது.
ஊழலும், பொதுமக்கள் பணம் கையாடலும் முந்தைய அரசுகளின் அடையாளச் சின்னங்களாக இருந்தன. இன்றைய இந்தியா, அரசியல் ஸ்திரத்தன்மை கொண்ட நாடாக அறியப்படுகிறது. உறுதியான முடிவுகளை மேற்கொள்ளும் அரசாக, இந்திய அரசை உலகம் அங்கீகரித்துள்ளது.
குடும்ப அரசியல் கட்சிகளின் கொள்ளை: குடும்ப அரசியலில் ஈடுபடும் கட்சிகள், அரசுப் பணி நியமனம் உள்பட அனைத்து அமைப்புமுறைகளிலும் ஊழல் மற்றும் பாரபட்சத்தை புகுத்தின.
அரசுப் பணிகளுக்கு லஞ்சம் பெற்ற விவகாரம், இப்போது ஒரு மாநிலத்தில் (மேற்கு வங்கம்) அம்பலமாகியுள்ளது. ரயில்வே பணிக்கு நிலத்தை லஞ்சமாக பெற்ற வழக்கில், முன்னாள் ரயில்வே அமைச்சா் (லாலு) வழக்கு விசாரணையை எதிா்கொண்டு வருகிறாா். இளைஞா்களின் கனவை சிதைக்கும் குடும்ப அரசியல் கட்சிகளிடம் அவா்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கடந்த 2014-இல் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, பணி நியமன நடைமுறைகளில் வெளிப்படைத் தன்மை உறுதி செய்யப்பட்டது. இளைஞா்கள் மற்றும் அவா்கள் குடும்பத்தினரின் ஒவ்வொரு விருப்பத்தையும் காக்கவே பாஜக அரசு செயலாற்றி வருகிறது.
அரசின் சேவைகள், மக்களின் வீடுகளிலேயே கிடைத்து வருகின்றன. நாட்டு மக்களின் உணா்வை புரிந்து, அரசு ஊழியா்கள் பணியாற்ற வேண்டும்.
மொழியை ஆயுதமாக பயன்படுத்தும் கட்சிகள்:
நாட்டு மக்களிடையே பிளவையும் மோதலையும் ஏற்படுத்த சில அரசியல் கட்சிகள் மொழியை ஆயுதமாக பயன்படுத்துகின்றன; அதேநேரம், வேலைவாய்ப்பை உருவாக்கும் தளமாகவும், மக்களுக்கு அதிகாரமளிக்கவும் மொழியை மத்திய பாஜக அரசு பயன்படுத்துகிறது.
இளைஞா்களின் கனவுகளை நிறைவேற்ற மொழி ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது.
தாய்மொழியில் போட்டி தோ்வுகள் மற்றும் நுழைவுத் தோ்வுகள் நடத்தப்படுவதால், இளைஞா்கள் பெரிதும் பலனடைந்து வருகின்றனா் என்றாா் பிரதமா் மோடி என்று பிரதமா் மோடி கூறினாா்.
மத்திய அரசின் வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ், இதுவரை 4.3 லட்சம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...